புதன், 17 ஜனவரி, 2024

இராஜ புதனப் பயணம் - பகுதி ஐந்து

 இராஜ புதனப் பயணம் - பகுதி ஐந்து

தொடங்கிய இடத்திலே முடிவது போன்ற திட்டமிடப் பட்ட சுற்றுலா, ஆதலால் தினம் சுமார் 300 கிமீ பயணம் செய்வது தவிர்க்க முடியாதது ஆனது. முக்கியமாகப் பார்க்க வேண்டிய இடங்களைத் தவறவிடாமல் சாரதி பார்த்துக் கொள்கிறார். உயரமாக ஏற வேண்டிய இடங்களைத் தவிர்த்து விடுகிறேன்.
நாள் ஆறு
ஜெய்சால்மரில் இருந்து காலை உணவுக்குப் பிறகு புறப்பட்டு, ஜோத்பூரை நோக்கிப் பயணம், புறப்படும் நேரம் தினமும் காலை 8 30. பிற்பகல் அடுத்த நகரை அடையச் சரியான பயண நேரம்.
மெஹரான்கர் கோட்டையை அடைந்து, நுழைவுச் சீட்டு பெற்று, மின் தூக்கியில் சென்று, இரண்டாம் தளத்தை அடைந்து, ஜஷ்வந்த் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் உபயோகித்த விலை உயர்ந்த பொருட்கள், கவசங்கள், பல்லக்குகள், உடைகள், பரிசுகள் என வகை வகையான காட்சிப் பொருள்களை பார்வையுற்று, மேலிருந்து கீழே நகரின் தோற்றத்தை பலவாறு கிளிக்கி, கீழே இறங்கும் போது சரிவான பாதையில் பேலன்ஸ் செய்து இறங்கி, அடுத்த இடமான உமைத் பவன் அரண்மனைக்குப் பயணம்.
இவ்வரண்மனை பிரிட்டிஷ் ஆர்க்கிடெக்ட் களை பயன்படுத்தி 1929 ல் ஆரம்பித்து 3000 ஆட்களைக் கொண்டு அன்றைய மதிப்பில் 94 இலட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. மிக அழகான அரச குடும்பத்தினர் மாளிகை.
இன்னொரு மியூசியத்தில் மன்னர் பயன்படுத்திய வித விதமான வின்டேஜ் கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் முதல் கேடிலாக் வரை, இன்னமும் ஓடக்கூடிய நிலையில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது, சுதந்திரத்திற்குப் பிறகு பதிவும் செய்யப்பட்டு அன்றைய பதிவெண்கள் கொடுக்கப் பட்டுள்ளது. மாலை விரைவாகவே ஓட்டலுக்குத் திரும்பி, இரவு உணவுக்குப் பின் மறுநாள் மவுண்ட் அபு பயணம் பற்றிய யோசனையுடன் உறங்கியாயிற்று.
நாள் ஏழு
காலையில் புறப்பட்டு மவுன்ட் அபு நோக்கி 265 கிமீ பயணம். கடைசி 22 கிமீ மட்டும் மலைப் பாதை பயணம். பிற்பகலில் Rising Sun Retreat அடைந்து செக் இன் செய்து, மதிய உணவு முடித்து, டெல்வாரா என்ற ஜெயின் டெம்பிள் விசிட். போட்டோ எடுக்க அனுமதி இல்லை. முழுவதும் சலவைக் கற்களால் ஆன கோயிலின் சிற்பங்களும், செதுக்கப் பட்ட கலைநயத்தோடு, தென்னக சிற்பக் கலைநுணுக்கத்தோடு ஒப்பிடலாம். வைக்கப்பட்டு இருந்த ஜெயின் குருக்களின் சிலைகள் அனைத்தும், 66 என்று நினைவு, என் கண்களுக்கு ஒரே உருவமாய்த் தோற்றமளித்தது.
அடுத்த இடம் பிரம்மகுமாரி என்று அழைக்கப்படும் பிரிவினரின் ஓம் சாந்தி பவன்பெரிய தூண்களே அற்ற, பிரமாண்ட அரங்கில், பக்தர் ஒருவர் ஏழு நாட்கள், தினமும் ஒரு மணி்நேரம் செலவிட்டு, " நாம் யார்" என்று உணர்ந்து கொள்ளலாம் எனவும் கடவுளை அடைய தியானம் எவ்வாறு உதவுகிறது எனவும் அறியலாம் என்றும் கூறினார். அவரிடம் என் மனைவி ஆண்டு தோறும் ஒரு குழுவினருடன் இங்கு வருகிறார், தியானமும் செய்கிறார் என்றவுடன் முதல் கேள்வி அவர் சொல்லி இங்கு நான் வந்தேனா என்று, நான் தனி ஒருவனாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன், பார்வையிடும் ஒரு இடமாக வந்தேனேன்றும் விளக்கினேன். சிலருக்கு மட்டும் இதன் பொருள் புரியும்.
அடுத்தது ஹனிமூன் பாயிண்ட், பாதி தூரம் நடந்து, நிக்கி என்ற ஏரியின் அழகையும் இரசித்து, மலை உச்சி தேரை போன்ற தோற்றமளித்த பாறையைப் படம் பிடித்து, ஐந்தரை மணி ஆனதால், சூரிய அஸ்தமனம் காணக் கிளம்பினோம். அந்த இடத்தை அடைந்த போது நடப்பது சிரமம் எனத் தோன்றியது, சக்கரங்கள் பொருத்தப் பட்ட சிறிய டிராலியில் அழைத்துச் செல்ல பலரும் காத்திருந்தனர். மேலே சென்று பலவித கோணங்களில் படமெடுத்துத் திரும்பி, தேநீரை அருந்தி, ரிசார்ட்டுக்கு திரும்பிய போது, பழைய தோற்றமளித்தாலும், மிகப் பெரிய தோட்டத்தின் நடுவே அழகாய்க் காட்சியளித்தது. இரவு வெப்ப நிலை 18 C இருக்குமென நினைக்கிறேன்.
இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி சவுத் ஆப்ரிக்காவுக்கு எதிராக, கோலியின் சதம் என, டிவி பார்த்து, குளிருக்கு இதமாய் போர்வைக்குள் மறைந்தேன்.
( தொடரும்)
All reactions:
Nibunamathy Duraisamy, Udhaykumar Appadurai and 3 others

கருத்துகள் இல்லை: