புதன், 17 ஜனவரி, 2024

இராஜ புதனப் பயணம் - பகுதி 4

 இராஜ புதனப் பயணம் - பகுதி 4

இராஜஸ்தான் மாநிலம் பழமை மாறாத தனது பாரம்பரிய கட்டிடங்களைக் காப்பாற்றுவது வியப்பாய் இருந்தது. மாநிலம் முழுதும் வீடுகள், வணிக வளாகங்கள் கோட்டைகள் போன்று தோற்றமளித்தன. நமது பயணம் இன்னும் சில நாட்கள் தொடரும்.
நாள் ஐந்து
பாலைவன டென்ட்டை காலை உணவுக்குப் பிறகு பிரிந்து, நினைவுகளைச் சுமந்து, இந்திய பாகிஸ்தான் எல்லையை நோக்கி பயணிக்கத் தொடங்கி, பாலைவனத்திற்கு நடுவே NH70 ல் மணல் மேடுகளையும், கருவேல மரங்கள், எருக்க மரங்கள் கடந்து தொடர்ந்தது.
எல்லையை அடைய 168 கிமீ பயணம் செய்ய வேண்டும். அதற்கு முன்னர் லோங்கோவாலா என்ற 1971 இந்திய பாகிஸ்தான் போர் நடைபெற்ற இடம் நினைவிடமாக மாற்றப் பட்டு இருந்தது. மிகக் குறைந்த வீரர்களுடன் போரிட்டு பாகிஸ்தான் வீரர்கள், மற்றும் T 9 Chinese டேங்க், போர் தளவாடங்களை அழித்தது மியூசியத்தில் விரிவாகச் சொல்லப்பட்டு இருந்தது. ஆடியோ வீடியோ காட்சியும் இருந்தது. 4/12/1971 நள்ளிரவில் ஆரம்பித்து அடுத்த நாளே புறமுதுகு காட்டி திரும்பக் காரணமான தரைப்படை, விமானப்படை வீரர்களுக்குத் தலை வணங்குவோம். அங்குள்ள ஆர்மி நடத்தும் கடையில் லோங்கோவாலா டி சர்ட் வாங்கி உடனே அணிந்து கொண்டு, இந்திய வீரர்களால் கட்டப்பட்ட எல்லைக் கோயில் தனோட் மாதாவையும் தரிசித்து, எல்லையை அடைந்தபோது பிற்பகலாயிற்று.
எல்லை வளைவில் போட்டோ எடுத்து , எல்லையில் உள்ள கேட்டை அடைந்த போது, பெண் சோல்ஜர் காவலில் இருந்தார், அவருக்கு நன்றி சொல்லி, பார்வைக் கோபுரத்தின் உயரே இருந்து, பாகிஸ்தான் எல்லையையும் கண்ட பிறகு மீண்டும் பயணம். இங்கே வருவதற்கு தனோட் கோயில் அருகே BSF அலுவலகத்தில் உங்கள் அடையாள அட்டையைக்காட்டி, Border Pass வாங்கி, இரண்டு செக் போஸ்ட்களில் உங்கள் போகும் திரும்பும் நேரம் பதிவிடப் படுகிறது. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.
ஜெய்சால்மர் நோக்கி 123 கிமீ பயணம் . ராம்கர் 54 கிமீ தூரம், மதிய உணவு நிறுத்தம். ஜெய் சால்மரை அடைந்து, வழிகாட்டி ஒருவருடன் ஸ்கூட்டரில் கோட்டைக்குள் நுழைந்தபோது தெரிந்தது, டூ வீலர் அல்லது நடந்தே தெருக்களில் செல்ல முடியுமென, அவ்வளவு குறுகலாய். 1974 க்குப் பிறகு மன்னர் குடும்பம் நகருக்குள் குடிபெயர்ந்த பிறகு அரசின் கட்டுப்பாட்டில் அரச மாளிகை. உயர்ந்த அரசர், அரசிக்கான தனித்தனியான அரண்மனைகள், கை வேலைப்பாடுகள், நுண்ணிய அழகிய கலை நயத்தோடு. சுமார் 4000 குடும்பங்கள் இங்கே வசிப்பதாகவும், அதில் 80% பிராமணர்கள், 20% ஷத்திரியர்கள் எனவும் கூறப்பட்டது. அரச வம்சத்தினர் ஷத்திரிய வம்சத்தினராயினும், அனைத்து ஆலோசனைகளும் பிராமண குருக்களிடம் இருந்து பெறப் பட்டுள்ளது. கோட்டை முழுவதும் ஆயிரக் கணக்கில் கைவினைப் பொருள்களின் வியாபாரம்.
அடுத்து சென்ற இடம் பட்வா ஹவேலி என்ற வணிகக் குடும்பத்தினரின் அரச மாளிகை போன்ற வேலைப்பாடுகள் நிறைந்த பகுதி. தங்கம், வெள்ளி, விலையுயர் கற்கள் அயல்நாட்டினருடன் நடைபெற்று இருக்கிறது. இங்கு ஜெயின் கோயில் ஒன்றும் உள்ளது. ஸ்வேதாம்பர், திகம்பர் என்ற இரு பிரிவுகள் உள்ளன. மகாவீர் கடைசி குருவாக கருதப் படுகிறார்.
ஓட்டலில் செக் இன் செய்து குளியல் முடித்து , கடிசார் ஏரிக்கு ஏழரை மணியளவில் அடைந்த போது, ஒலி ஒளிக் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. நீரின் நடுவே வண்ண லேசர் ஒளியில் பல வித காட்சிகளும் கதையாகவும், மியூசிகல் ஃபவுன்டென் போன்றும் அழகாய்.
மனிதர்கள் தான் நாடு, மதம், சாதி, மொழி எனப் பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது ஏனோ ?, ஒவ்வொரு போரிலும் இறக்கும் பல்லாயிர உயிர்கள், நாகரீகம் வளர வளர அழிவின் வளர்ச்சியும் அதிகம். புராதனங்கள் காக்கப்பட்ட இவ்வூர்களும் பழமையான தோற்றமளித்தாலும், அழகைப் பிரதிபலிக்கின்றன. அமைதியைப் பேராசை, பொறாமையில் இழந்து மனிதன் தன் இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறான். கரோனா போன்ற கிருமிகள் அவ்வப்போது உணர்த்தினாலும், மனிதன் மாறுவதில்லை. மீண்டும் யுத்தம் எல்லைகளில்.
( தொடரும்)

All reactions:
Ashok Kumar, Kumaran Kumar and 7 others

கருத்துகள் இல்லை: