புதன், 17 ஜனவரி, 2024

இராஜ புதனப் பயணம் - பகுதி ஒன்று

 இராஜ புதனப் பயணம் - பகுதி ஒன்று

பூனாவில் செப்டம்பர் 18லிருந்து தங்கியிருந்த போது மனதில் தோன்றியது, இதுவரை பார்த்திராத இராஜ புதனத்தை ( இராஜஸ்தான் மாநிலம்) ஏன் பயணத்திற்குத் தேர்வு செய்யக் கூடாதென. சிறிய ஆய்வுகளுக்குப் பிறகு போக வேண்டிய இடங்கள், பயண ஏற்பாட்டாளர்களோடு ஆலோசித்து நாட்கள் குறிக்கப் பட்டு, முன்தொகை செலுத்தப் பட்டு, ஜெய்ப்பூரில் தொடங்கி, அங்கேயே முடியும்படி. புனே-ஜெய்ப்பூர்- பெங்களூர் விமானப் பயண பதிவுகளும் முடிந்தன. அக்டோபர் 30, 2023 முதல் நவம்பர் 9,2023 வரை.
நாள் ஒன்று
ஜெய்ப்பூரை அடைந்தபோது, பப்புசிங் காத்திருந்தார்,அடுத்த பத்து நாட்கள், காரோட்டி, வழிகாட்டி, நண்பர் என்ற அனைத்தும். மாலை ஆறு மணியளவில் ஓட்டலை அடைந்து, சிறிது நேர ஓய்வுக்குப் பின், ஜல் மஹல் என்ற நீரின் நடுவே அரண்மனை ஒன்று, இரவு நேர விளக்கொளியில் காண அனைவரும் வந்திருந்தனர். புல்லட் இங்கு. மூன்று சக்கர வாகனமாக மாற்றப்பட்டு சென்னை போல் ஷேர் ஆட்டோ போல நகரெங்கும் வியாபித்திருந்தது. இரவு உணவுக்குப் பின் மறுநாள் காலை ஒன்பது மணிக்குப் புறப்பட்டு, ஜெய்ப்பூரில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள் பயணம் தொடர முடிவானது.
நாள் இரண்டு
ஆம்பர் ( Amber/ Amer) கோட்டை முதலில் சென்ற போது, மக்கள் கூட்டம் அலை மோதியது. எங்கும் வெளி நாட்டினர் முகங்கள். இந்தக் கோட்டையைப் போன்று அனைத்தும் மலைகள் மீதே கட்டப்பட்டுள்ளன. சுமார் 12கிமீ நீளமான கோட்டை மதில் சுவர் பல மலைகளை வளைத்து, பாதுகாப்புக்காக கட்டப் பட்டுள்ளது. பல அடுக்கு காவல்கள், எதிரிகளைக் குழப்பும் பாதை வளைவுகள். யானைகள் அதிகமாக பயன்படுத்தப் படுகின்றன. பொதுவான அரண்மனைகளில் உள்ள அனைத்து அம்சங்களும். பச்சிலைகள் சாயம் ஓவியம் தீட்ட பயன் பட்டிருந்தன. இராணி, இராஜாக்கள் பிரத்தயேக அறைகள், தர்பார், காவலர் குடியிருப்பு , சுரங்கப் பாதை என பலவும்.
மான்சிங், ஜெய்சிங் என்பதே அரசர்களது பெயராக இருந்தது. ஒன்று , இரண்டு என தென்னக மன்னர்கள் போல் பெயருக்குப் பின்னால்.
முகலாய மன்னர்களுடன் உறவு மட்டுமல்ல படைத்தளபதிகளாகவும் இருந்துள்ளனர். நமது காலத்தில் இருந்த காயத்ரிதேவி மிக அழகானவராகவும், ஆடம்பர வாழ்க்கையும் வாழ்ந்திருக்கிறார். தற்போது அரச குடும்பத்தினர் மலைக் கோட்டையை விட்டு நகரத்து அரண்மனையில் வசிக்கின்றனர். தற்போதைய மன்னர் பரம்பரை வாரிசு பத்மநாபசிங் 24 வயதுடையவர், தத்தெடுக்கப்பட்டவர். பிள்ளை இல்லாதவர், அரச குடும்பத்தில் ஒருவரை தத்தெடுப்பது வழக்கமாகவும், பெண்கள் ஆட்சியில் அமரத் தடையும் எப்போதும். மன்னர் மான்சிங் பன்னிரண்டு மனைவிகள, 350 வைப்பாட்டிகளுடன் வாழந்திருக்கிறார்.
இராணிகள் தங்களுக்குள்ளே இரகிசயம் தங்கள் அறைகளில் பேச அனுமதி இல்லை, பொது மண்டபம் ஒன்றுள்ளது கூடிப் பேச. வைப்பாட்டிகள் குழந்தைகளுக்கு அரச உரிமை இல்லை. உடன்கட்டை ஏறுதல் பழக்கத்தில் இருந்தது. அரசருக்கு நம்பிக்கையான பெண் ஒற்றர்கள் அந்தப்புர நடவடிக்கைகளைக் கண்காணித்து அரசரிடம் தினமும் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
அனைத்தும் பிரமாண்டமாய் அரசர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு உதாரணமாய், கோட்டை பல மலைகளிலும் பரவி இருந்ததைக் காண முடிந்தது. வேலைப் பாடுகள் மலைக்க வைத்தன. அந்நிய ஆதிக்கத்திற்குப் பிறகு மறைக்கப் பட்ட பல வரலாற்று நிகழ்வுகள் இத்தகைய இடங்களுக்குச் செல்லும் போது உணர முடிகிறது.
( தொடரும்)
All reactions:
Bharath Kumar V, Suresh Varadarajan and 3 others

கருத்துகள் இல்லை: