புதன், 17 ஜனவரி, 2024

இராஜ புதனப் பயணம் - பகுதி 2

 இராஜ புதனப் பயணம் - பகுதி 2

ஆம்பர் கோட்டையில் நடந்து கால்கள் வலியெடுத்ததால், National Handloom கைவினைக் கலைஞர்களின் பொருட்கள் விற்பனை வளாகத்தில் சில மணித்துளிகளோடு, Moneyum கரைந்தது. காய்கறிச் சாயங்கள் கொண்டு எவ்வாறு துணி மீது அச்சிடுவது என செய்முறை விளக்கம் தந்தனர். இரசாயனக் கலவை முழுதுமாக உபயோகிக்காமலே. சுவையான தேநீரும் கிடைத்தது.
அடுத்து ஜெய்கர் கோட்டைக்குப் பயணம். இதன் சிறப்பு 31 அடி நீளம், 50 டன் எடை, 100 கிலோ வெடி மருந்து அடைக்கப் பட்டு, ஒரு முறை 50 கிலோ வெடிகுண்டு இதன் மூலம் 21 கிமீ வரை செல்லுமாம்.
பெரியதொரு நீர்த்தேக்கமும், அதனுள்ளே தங்க அணிகலன்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், பிற்காலத்து அரசியல் தலைவர்களால் கொள்ளையடிக்கப்பட்டன என்றும் சொல்லப் படுகிறது.
மேலிருந்து பார்க்க மலை சூழ்ந்த காட்சிகள் மனதைக் கவர்ந்தன. அடுத்து நமது பயணம் நகர்கர் கோட்டை. இங்குள்ள கண்ணாடி மாளிகை பல வித வண்ண கண்ணாடிகளால் ஆனது. சுமார் 30 இலட்சம் கண்ணாடிகளால் ஆனதென்றும், பல வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவை எனவும் அறிந்தேன். புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.
பொம்மலாட்டம் ஒன்றும் பார்த்துவிட்டு, நுழைந்தது மெழுகுச்சிலைகள் உள்ள அரங்கம். இலண்டன் வேக்ஸ் மியூசியம் நினைவுக்கு வந்தது. போட்டோக்கள் அவர்களே எடுத்து, மொபைலில் பதிவு செய்து தருகிறார்கள், கட்டணம் உண்டு. பொதுவாகவே சுற்றுலாத் தளமாக இருப்பதால், விலை சற்றே கூடுதலாக. வெளியே பதனிடப்பட்ட புலியொன்று உறுமிக் கொண்டிருந்தது.
பிர்லா கோயில் மாலையில் பார்க்க அழகாக இருந்தது. சலவைக் கற்களால் ஆனது. சுற்றிலும் தோட்டம் பசுமையாய் அழகாய், அருகில் உள்ள பழைய கோட்டையில்,சிவன் கோயில் உள்ளதாகவும், ஆண்டில் ஒருமுறை மகாசிவ ராத்திரி மட்டுமே அனுமதி என்றும் சாரதி தெரிவித்தார்.
மறுநாள் காலை எட்டரைக்கு பிகானீர் கிளம்ப வேண்டும், 350 கிமீ பயணம் என முடிவானது, உணவருந்தி , உறங்கியாயிற்று.
நாள் மூன்று
காலை உணவை முடித்து எட்டரைக்கு சரியாக கிளம்பி, NH11ல் பிகானீர் நோக்கி பயணம். பாதை நெடுகிலும் கருவேல மரங்கள், பாலைவன மணல் மேடுகள். நீரற்ற, பயிரிடப் படாத வறண்ட நிலங்கள்.
சுமார் 1 45 க்கு பிகானீர் அடைந்து, மதிய உணவுக்குப் பிறகு ஜூனாகர் கோட்டைக்குள் நுழைந்து அரசர் அரசியர் பயன் படுத்திய உடைகள், படுக்கைகள், மரத்தால் ஆன பலவித பொருட்கள், கேடயங்கள், கத்திகள், கவசகவசங்கள், பல்லக்குகள், அலங்காரப் பொருட்கள் என ஆடம்பரத்தின் எல்லைகளைக் காண முடிந்தது. அவற்றில் பெரும்பாலானவை வேற்று நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
போர் விமானம் ஒன்று, முதல் உலகப் போரில் ஜெர்மனியில், பிரிட்டனுக்கு உதவியதால் , மன்னருக்கு கவுரவித்து தரப்பட்டதும் பார்வைக்கு வைக்கப்பட.டுள்ளது. 1400 களிலிருந்து இம்மன்னர்கள், இந்த நிலப்பரப்பை ஆட்சி செய்துள்ளனர். ஏழு வயதில் மன்னராக முடி சூடிக் கொண்டவரும் உண்டு.
முந்தைய நாள் ஓட்டலில் லேப் டாப் சார்ஜர், ஷார்ட் சர்க்யூட் ஆகி பழுதானதால், பல கடைகளில் அலைந்து ஒரு வழியாக போத்ரா காம்ளெக்ஸில் கிடைத்தபோது, சிறிது மகிழ்ச்சியே, கடை உரிமையாளரின் இள வயது உறவினர், நடிக்க ஆர்வமுள்ளவராய், விஜய் முதல் விஜய் சேதுபதி வரை தென்னக நடிகர்கள் எவ்வாறு தலைக்கனமற்று உள்ளனர் என வியப்பாகச் சொன்னார். அவர்களது விருந்தோம்பல் தேநீரை அருந்தி, விடுதியை அடைந்து, மறுநாள் காலை ஜெய்சால்மர் பயணம், என்ற நினைவுடன், பிக் பாஸ் முந்தைய நாளின் சண்டைகள், அழுகைகள் பார்த்து, தரக்குறைவாய் மாறிய மனிதர்கள், பணமென்றால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை நினைவூட்டினார்கள். மனிதம் அங்கே மடிந்து கொண்டிருந்தது.
( தொடரும்)
All reactions:
Balaji Gajendran and Bhuvaneswari Bhuvaneshwari

கருத்துகள் இல்லை: