புதன், 17 ஜனவரி, 2024

அரபிக் கடலோரம் நாள் நான்கு, ஐந்து

 அரபிக் கடலோரம்

நாள் நான்கு, ஐந்து
முன்னரே பேசி வைத்தபடி ரெனி தன்னுடைய டாக்ஸியில் ஒன்பது மணிக்கு தயாராக காத்திருந்தார். சிற்றுண்டிக்குப் பிறகு புறப்பட்டு, மூணார் நோக்கிப் பயணம் NH 66 தொட்டு வேகமெடுத்தது. அடிமாலியில் மலையேற்றம் ஆரம்பம்.
வழி நெடுகிலும் தேயிலைத் தோட்டங்களின் பசுமையும், மலை முகடு மேக மூட்டமும், அருவிகளின் வெண்மைத் தோற்றமும் கண்களுக்குக் குளிர்ச்சியாய். மூணார் நுழைவதற்கு முன்பு மதிய உணவு, பிறகு அழகிய பூங்கா விசிட், ஊஞ்சலில் சிறு பிள்ளை போல விளையாட்டு என நேரம் போனது. ஓட்டலை அடைந்து செக் இன் செய்து அறைக்கு வந்த போது குளிரின் தாக்கம் தெரிந்தது. மலையேற ஆரம்பித்த போதே ஏசி ஆஃப் செய்து மலைக் காற்றை சுவாசிக்க நன்றாக இருந்தது.
மறு நாள் காலை பத்து மணியளவில் கிளம்பி, கொழுக்குமலை செல்வதற்கு, சின்னகனல் சென்று அங்கிருந்து ஜீப்பில் பயணம். கொழுக்கு மலை டீ எஸ்டேட் ஹாரிஸன் மலையாளம் லிமிடெட் சொந்தமானது. 1300 ஏக்கரில் மலைகள் பலவும் கடந்து. 12 கிமீ தார் ரோடிலும், 6 கிமீ பாறைக் கற்களால் ஆன சமமாய் இல்லாத ஆபத்தான பாதையிலும் செல்ல வேண்டியுள்ளதால், நம்மிடம் கையொப்பம் பெற்ற அனுமதிச்சீட்டை நுழை வாயில் அலுவலகத்தில் பணம் செலுத்தி பர்மிஷன் வாங்கி, டீ பேக்டரியில் பதிவிட்ட பிறகு, மிகக் கடுமையான பயணம். சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் உடம்பின் அனைத்து ஜாயிண்ட்களும் செக் செய்யப்படும், உடல் உள்ளே முழுக் குலுக்கலும் உண்டு. அதனால் நானிட்ட பெயர் குலுக்கு மலை. ராஜா ஜீப்பை லாவகமாக ஓட்டியது மட்டுமில்லை, கை தேர்ந்த போட்டோகிராபராகவும். இரட்டை வேடங்களாக என்னையும் நண்பர் அசோக்கையும் கிளிக்கினார். சுமார் 180 ஜீப்கள், சன் ரைஸில் ஆரம்பித்து மாலை வரை அப்பாதையில் சென்று வருவது அதிசயமே. ஒரு ஜீப் இரண்டு முறை மட்டுமே மேலே போய் வர அனுமதி. ஆறு மாதத்திற்கொரு முறை டயர் மாற்றியாக வேண்டுமாம்.
பல அழகான பள்ளத்தாக்குகளைக் கடந்து மலை உச்சிக்கு அருகாமையில் ஜீப்பை நண்பர் நிறுத்தி விட்டு, உச்சி முனையை அடைய , நடந்து சென்று அடைந்த போது, சரிவில் சிலர் ஆபத்தான நிலையில் நின்று போட்டோ எடுப்பது நமது மனம் பதைத்தது.
பாதை ஒரு மீட்டர் அகலமே உள்ள களிமண் பாதை. அழகான மலைச் சிகரங்கள், மேகங்கள் கீழே, மெதுவாக நகர்ந்து செல்லும் காட்சி, மலையை முகம் மறைப்பது போன்று, திரும்பவே மனமில்லை. இயற்கையின் அழகை இரசித்தபடியே இருக்கலாம்.காலம் முழுதும் மன அமைதிக்கு நல் மருந்தாகும்.
கீழே இறங்கும் போது, மலைப் பாதையின் அடுத்த பக்கத்தில் தமிழ் நாட்டு எல்லையில் தேநீர் நிறுத்தம். தமிழ் நாட்டு எல்லையிலும் தேயிலைத் தோட்டம் 1000 ஏக்கர் பரப்பளவில், ஆக்டிவ் அற்று, தமிழ்நாட்டு பிரபல அரசியல் வாதிக்குச் சொந்தமென ராஜா சொன்னார்.
மலையேறுவதற்கு முன்பே, ரெனியின் வீட்டிற்கும் சென்று, சிறிய ஓடையொன்றை இரசித்தோம். அங்கிருந்து திரும்பி மூணாரில் அரங்கொன்றில் நடைபெறும் கதகளி நடனமும், களரி விளையாட்டும் பார்க்க இரண்டு மணி நேரம் காட்சிக்கு உட்கார உடல் ஒத்துழைக்க மறுத்ததால், ஓட்டலுக்குத் திரும்பி, மறுநாள் வாகமான் செல்ல தயார் செய்ய ஆரம்பித்த போது, திங்களன்று பயணம் முடிகிறதே என சிறிய மன வருத்தம்.
( மலை தொடரும்)
All reactions:
Ashok Kumar, Selva Muthiah and 11 others

கருத்துகள் இல்லை: