புதன், 17 ஜனவரி, 2024

கிராமம் - காலை நேரம்

 கண் முன்னே காட்சி விரிந்தது. அழகிய சிறிய கிராமம். பொழுது விடிந்து கொண்டிருக்கிறது. தூரத்தே விடியலைக் கட்டியம் கூறிய சேவலின் கூவல். செம்மறி ஆடுகளின் கழுத்து மணியின் ஓசை இசை நயத்தோடு.

சாணத்தைக் கரைத்து குடிசைத் தரையில் மொழுகி, வாசலில் தெளித்து, கோலப் புள்ளிகள். எருதுகளை ஓட்டியபடி , தோளில் துண்டும். வெற்று மார்பும் கிணற்று நீரை சேனைக் கிழங்கு வயலுக்குப் பாய்ச்ச மாமன் புறப்பட்டு விட்டான். எதிரே உள்ள மலை உச்சியில் ஒளிப் பிழம்பாய் கதிரவன் மறைந்திருந்து பார்க்கிறான். ஈச்ச மரத்து பழக்குலைகள், பனை மரத்து நுங்கு அவ்வொளியில் பளபளப்பாய்.
ஆலமரம் போல் பரவிய மாமரத்துக் கிளைகளில் கிளிகளின் கீச்சுக் குரல். சிறுவர்கள் சிலர் இங்கும் அங்கும் ஓடியபடி, கல கலவென சிரிப்புச் சத்தம். ஊடே கொலுசுச் சத்தம் ஒன்று நடந்து சென்று தெரு முனைக் கடையில் சூடான இட்லியும், தண்ணீர் மிகுந்த சூடான சாம்பாரும் வாங்கும் பாத்திரங்களோடு.
ஒலி பெருக்கியில் காதைக் கிழிக்கும் சத்தத்தோடு, கணபதியை அழைக்கும் பாடல் கோவில் வாசலில் இருந்து. ஊர்க்கிணறைச் சுற்றி பெண்டிர் உருளைகளில் கயிற்றை இழுக்கும் சத்தம். அதனோடு காலைச் செய்திகள் போல், சூடான பக்கத்து வீட்டு குடும்பம் பற்றிய அலசல். காற்றிலே கொதித்துக் கொண்டிருக்கும் உலையிலிருந்து கேழ்வரகுக் கூழின் வாசனை.
பல் போன பாட்டி கை உரலில் வெற்றிலை பாக்கு கலவையை இடிக்கும் சத்தம். நேற்று மூடிய செங்கற் சூளையில் எரியும் விறகின் புகையோடு, களிமண் வாசமும் கலந்து காற்றில் பரவ, மெல்ல மெல்ல தூரத்து நாய்களின் ஊளையிடும் சத்தத்தின் ஊடே காலை நேரம் விடிந்து கொண்டிருந்தது.

கருத்துகள் இல்லை: