செவ்வாய், 16 ஜனவரி, 2024

தாயீ

 தொப்புள் கொடி சொந்தமுன்னு சொன்னாங்க

தொடர்ந்து வரும் என்னோடன்னு சொன்னாங்க
பாதையிலே கைபிடிச்சு உன்னோட வந்தேனே
பாதிவழி விட்டு விட்டு சென்றாயே
குத்தம் சொல்லி முறையிட யாரிருக்கா
சத்தம் இட்டு அழுதாக்கா வருவாயா
மனசுல குமுறியே உடலுருகிப் போனாயோ
மருந்தே நஞ்சாப் போச்சுதுவோ தாயீ
கும்பிட்ட கடவுளும் கைவிட்டுப் போனானே
குறையாத குணமும் கூடக் காக்கலியே
அமைதியும் அடக்கமே உருவான உன்னை
அவசரமாய் அழைத்தது ஏனோ தெரியலியே
ஒன்று இரண்டல்ல மூன்று பிள்ளைகளை
அன்று நீவிட்டு எங்கேதான் போனாயோ
சோகங்கள் பூட்டி வைத்து நாளாச்சு
மேகங்கள் போலவே நினைவுகள் ஓட்டமும்
மேற்கிருந்து கிழக்காக கலைந்தும் கலையாமலும்
சோகங்கள் கூடாதென தேற்றிக் கொண்டாலும்
சோர்வடையும் நேரமெலாம் உன்அன்பு தேவைதானே
வாடிய பயிருக்கு வயக்காட்டு நீரைப்போல்
வாஞ்சையான வார்த்தைகள் மருந்தான உன்சொல்லே
மீண்டும் வருவாயா தவமேதும் செய்தாலே
வேண்டும் உன்மடியே தலைசாய்த்து கண்ணுறங்க !

கருத்துகள் இல்லை: