வெள்ளி, 24 மார்ச், 2023

சமூக நிலைப்பாடு

ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிப் பாருங்கள். உயர்சாதி என்றும் தாழ்ந்த சாதி என்றும் பிரிந்திருந்த இரண்டு வித வர்ணங்கள். அடிமைப் பட்டே வாழ்ந்த பெரும்பான்மை மக்கள். இந்துக்கள் என்று அவர்களை யாரும் அணைத்துக் கொள்ளவில்லை. படிப்பறிவற்று மேலே எழாவண்ணம் அடக்கியே வைக்கப் பட்ட இனம்.

காமராஜர் போன்ற பெருந்தலைவர் இருந்தும் அவர் காங்கிரஸ் தவைவர் என்பதால் மக்களின் மதிப்பை இழந்தார்,தேர்தலில் தோற்றார். எதனால் நடந்த்து, இதெல்லாம். அடக்கியே வைக்கப்பட்ட இனம் வெகுண்டெழச் செய்ய பெரியாரும், தேர்தல் அரசியல் சமுதாய சீர்திருத்தத்திற்குத் தேவையென நினைத்த அண்ணாவின் வரவுமே.
கடவுள் மறுப்பும் அவர்களது உத்தியே. மூட நம்பிக்கைகள் பலவும் கடவுள் பெயரால் மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டனர். இன்றும் தொடர்கிறது. கரோனா காலத்தில் எந்தப் பாகுபாடும் இன்றி குவியல் குவியலாய் இறந்தவர்கள் உயர்சாதி, கீழ்சாதி, பணக்காரன், ஏழை எல்லோருமே.
இன்று கூக்குரலிடுபவர்கள் அன்று எங்கோ உயிர் பயத்தில் முடங்கிக் கிடந்தனர். அவர்களது உறவினர் கூட மாற்று மதத்தினராலே சவ அடக்கம் செய்யப்பட்டனர். எங்கே போயிற்று, மதப்பற்று அன்று.
எத்தனை கொடுமைகள் நடந்தன, காலங்காலமாய், உயர்சாதிப் பெண்டிரையும் அடக்கி ஆண்டனர்,மூடப் பழக்க வழக்கத்தால். கூக்குரலை எழுப்பும் எவரும் அன்று வாயைத் திறந்தவரில்லை.
தலைவர்களைத் தகாத வார்த்தைகள் பேசும் வர்க்கத்தினர் எவ்வளவு பேர் நாட்டைக் காக்க உயிர் விட்டனர், போர் முனை சென்றனர், போராட்ட களத்தில் நின்றனர். வாய்ப்பேச்சு வீரர்கள், வாளெடுக்காமல் வாயால் மட்டுமே வசை பாடுபவர்கள். மிக மிகச் சிலரே விதி விலக்கு.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப் பட்டவர்கள் புரட்சி சிந்தனையாளர்களாக மாறியது காலத்தின் கட்டாயம். நேர்மையான வழியில் எதை வேண்டுமானாலும் அடையுங்கள். பொய், மதம், மூட நம்பிக்கை, பழையன பேசுதல்,பண முதலைகள் சார்பு, ஒரு சாரார் உயர்வு, பின் வாசல் நுழைவு, அதிகார தவறாளுமை தவிர்த்து அனைவரையும் சமமாகப் பாவித்து நாட்டு முன்னேற்றம் காணுங்கள். தவறான கொளகைகள் நீண்ட நாட்கள் தொடர முடியாது. மனக் குமுறல்கள் எரிமலை போன்றவை, வெடித்துச் சிதறினால், நீங்களும் சாம்பலாகி விடுவீர்கள்.
ஆயிரம் ஆண்டுகள் அவ்வினம் அடிமைப் பட்டது போல், நீங்களும் ஓராயிரம் ஆண்டுகள் பொறுமையாக இருங்களேன்.

கருத்துகள் இல்லை: