வெள்ளி, 24 மார்ச், 2023

நடைப் பயிற்சி

ஆளுக்கு ஆள் மாறுபடும். சிலர் மிகவும் சிரத்தையாக விடாது ஆண்டுகள் பலவும் தொடர்ந்தே நடப்பார்கள். சிலர் விட்டு விட்டு ( என்னைப் போன்று) தொடர்வார்கள். தொப்பை குறைவதும் உண்டு, குறையாமலும் இருப்பதுண்டு, அவரவர் உணவும், தண்ணியும் பொறுத்து.

கடற்கரை, பூங்கா, சாலைகள் என எங்கு நோக்கினும் நகரங்களில் இதைக் காணலாம். பல வித முகங்கள், பல வித கோணங்கள், பல வயதினர் என பாகுபாடற்ற நடைகளில் பணச் செலவு பொதுவாக இல்லை. மூலிகைச் சாறு, தேநீர் என சிறிய செலவுகள் தவிர. பூங்காக்களைச் சுற்றி உள்ள காய்கறி, இளநீர், நாட்டு மருந்து வகைகள் இதில் அடங்கா. மல்டி பர்ப்பஸ் வாக்கிங் வகையில் இது சேரும்.
சிறிய வயதில் ஆரம்பித்த ஓட்டம் கீழ்பாக்கம் போலீஸ் கோர்ட்டர்ஸ் செனாய்நகர் இளங்காலை ஓட்டம் நியூ ஆவடி ரோடு உடற்பயிற்சி மைதானத்தில் தண்டால், புல் அப்ஸ்ஸில் முடியும். உண்மையான பாடி பில்டர்களை அவ்வப்போது பார்க்க இயலும். அதில் நடிகைகளின் மெய்க்காப்பாளாரும் அடங்குவர். அவ்வாறு பயிற்சி செய்பவர்கள் நடையே தனியாகத்தெரியும். பல கதைகள், பல உறவுகள் பரிசீலிக்கப் படும்.
பள்ளியில் புட்பால் , ஹாக்கி விளையாட்டு, வகுப்புத் தோழரோடு. என் சி சி பெரேடில் சில சமயம் நீண்ட நடைப் பயணம் உண்டு. கல்லூரி சென்ற பிறகு கிடைத்த நேரத்தில் மட்டும் விளையாட்டும் ரன்னிங்கும் உண்டு. மரத்தான் ஓட்டத்திலும் கலந்து கொண்ட அனுபவங்கள். அப்போதெல்லாம் எனது வெயிட் 59 Kg என்பதை நீங்கள் நம்ப வேண்டும். திருமணம் 1983ல் நடந்தபோது 63 Kg தான். அது பல வருடங்களாக அப்படியே இருந்தது. வேலை நிமித்த பயணங்கள் அதிகமாய் இருந்த சமயங்கள். அதிக மாற்றங்கள் 2005 வரை நிகழவில்லை எடையில், நடைப் பயிற்சி என தனியாக எதுவுமில்லை, நண்பர்களோடு சுற்றும் நடை மட்டுமே.
2008 வேலையிலிருந்து விலகி சொந்த பிஸினஸ் செய்ய ஆரம்பித்த பிறகு வியாபரம் நஷடத்தில் போனாலும், சேமிப்பு கரைந்தாலும் உடல் எடை பன்மடங்கு இலாபமாகி 90 Kg ஐத் தொட்டது. இப்போது வாக்கிங் முக்கியமான ஒன்றாக மாறினாலும் விட்டு விட்டே தொடர்ந்தது.
நடைப் பயிற்சிக் களங்கள் மாறிக் கொண்டே இருந்தது. UK Knutsford சாலை, பெங்களூர் பூங்காக்கள், சென்னை அண்ணாநகர் டவர் பார்க், மஸ்கட் அருகே பாலை வனத்துச் சாலை, சென்னை மெரினா, கொடைக்கானல் ஏரிச் சாலை, பெருங்களத்தூர் மலையேற்றம் என பல இடங்கள்.
என்ன தான் நடந்தாலும், தொடர்ந்து பயிற்சி செய்யாததாலும், உணவு முறையை மாற்றாததாலும் மாற்றம் எதுவும் பெரிதாக இல்லை, தொப்பை அளவும் சேர்த்து.
நண்பர்கள் சம்பந்தம்,சுரேஷ் போன்றோர் பல உணவு முறைகளைப் ஃபாலோ செய்யச் சொன்னாலும் ஓரிரு நாட்களே அது நடக்கும், மறுபடி பழைய உணவு முறையே. இப்போது தொடங்கியுள்ள 4000 steps/ 2.7kms என்ற நடை எவ்வளவு நாட்கள் தொடரும், மாற்றம்கொண்டு வருமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: