வெள்ளி, 24 மார்ச், 2023

பேராண்டி

 கிராமத்துக்குப் போறேண்டா பேராண்டி நாளைக்கு

கிரயம் போடணுமாம் காணி நிலமாம்
உழுறதுக்கு காளை இரண்டும் வேணும்
உரம்போட பச்சை தழைங்க வேணும்
நாத்து நடவு நாளைக்கே நடக்கணும்
நாலுபேரா வந்து கலந்துக்க வாங்க
கிழங்கு தோட்டத்துலே தண்ணி பாச்சணும்
கிழவனுக்கு உதவ வாடா பேராண்டி
கத்தரிக்கா காச்சுருக்கு பறிக்கணும் சந்தைக்கு
கால்வயிறு கஞ்சிக்கு காசு சேக்கணும்டா
மிளகா பழுக்குது கூடையிலே பறிச்சுப்போடு
இளசா இளநீ ஒண்ணு வெட்டித்தா
கஞ்சியோ கூழோ ஆத்தா கொண்டாருவா
மிஞ்சிய சோத்த தண்ணி ஊத்திவை
நாளைக்குக் காலையிலே நீராகாரம் ஆகும்
மாட்டுக்குத் தீனி மறக்காம வச்சுப்புடு
காட்டுக்கு அக்கா போறாளா இன்னைக்கு
அடுப்பெரிக்க விறகு அவதான் கொண்டாரணும்
அம்மாவ சும்மாடு தலைலே வைக்கச்சொல்
ஏரிக்கரை போயி குளிச்சுட்டு வாரேன்
ஏத்தம் இறைச்சா நீயும் குளிச்சுக்க
பள்ளிக் கூடம் போகணுமோ நாளைக்கு
படிச்சுக்க நல்லா படியளக்கும் உனக்கு
காயுற வெய்யிலுலே கருப்பாச்சு உன்தோலு
மேயுற மாட்ட கொட்டடிலே கட்டு
வானம் கருக்குது மழை வரும்போல
வாசம் வருது மண்ணு கலந்து
சோளக் கதிருவிட ஆரம்பிச்சு நாளாச்சு
சோக்காளி மாமன் எங்கே போனானோ
கலக்கல் குடிச்சே வயிறு புண்ணாச்சு
கடிஞ்சாலும் திருந்தலியே பாவி மாமன்
பொழுது சாஞ்சாலே பொல்லாத பேச்சு
கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆச்சு

கருத்துகள் இல்லை: