Bali, Indonesia
04/07/2024
காலை ஒன்பதரைக்கு , சிற்றுண்டிக்குப் பிறகு முதல் பயணம், இரண்டு 35 இருக்கை பஸ்களில். நான் இன்றும் கமீலா கைட் பஸ்ஸில் தொடர்ந்தேன், அவரது மொழி மற்றும் குழுவைக் கட்டுக்குள் வைக்கும் திறன் அழகு. தீர்த்தா எம்புல் என்ற புனித நீராடும் இடத்தை அடைந்து, பிரத்யேக பச்சை நிற வேட்டியில் குளத்தில் இறங்கி பத்துக்கும் மேற்பட்ட மிருக உருவச்சிலை வாயில் வரும் நீரில் மும்முறை முழுகி வெளிவந்து, உடைமாற்றிய பிறகு, மற்றொரு மஞ்சள் தலைப்பு கொண்ட சாரங் என்ற வேட்டி கட்டியபடி, கோயில் உள் அமர்ந்து, அங்கிருந்த வெள்ளை அங்கியணிந்த புனிதரின் மந்திர ஓதுதல் முடிந்து, நாங்கள் அனைவரும் வெவ்வேறு நிறப் பூக்களை கையிலேந்தி ஐந்து முறை தொழுத பின் வெளியேறும் வழியில், கடைத் தெருக்களைப் பார்வையிட்டபடி, கடந்த போது அனைத்தையும் வாங்க வேண்டும் போலத் தோன்றியது. சில கடைகளில் இந்திய ரூபாயும் பெற்றுக் கொள்வோம் என்றனர்.
பஸ்ஸில் அமர்ந்த பிறகே தெரிந்தது, சிலர் அறிவிப்பின் படி நடவாமல் , பொருட்கள் வாங்கியது.
பஸ் புறப்பட்டு கிண்டாமணி அடைந்தபோது, மதிய உணவு தயாராக ஆக நேரமெடுக்கும் எனக் கூறியதால், போட்டோ கிளிக் செய்ய நிறைய அவகாசம் கிடைத்தது. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தன்னை குளிர்விக்க வழிபட வந்த மக்கள் சில ஆயிரங்கள், லாவாவைக் கக்கி பொசுக்கியது என சோகமான தகவல். அதற்குப் பிறகும் ஒருமுறை வெடித்துச் சிதறிய போதும் அழிவேதும் ஏற்படவில்லை என கைடின் தகவல். இப்போது பட்டூர் எரிமலை அமைதியாகவும், ஏரியும் , பசுமைக் காடுகளும் அழகான தோற்றத்துடன். அழகுக்குள்ளே ஆபத்தும் ஒளிந்திருக் கிறது ( Active Volcano). லாவா வழிந்த இடங்கள் கருநிறத்தில் தோற்றமளித்தன.
மதிய உணவுக்குப் பிறகு, மீண்டும் பயணம், குறுகிய சாலை நகரெங்கும் இருப்பதால், மெதுவாகவே செல்ல முடிந்தது. பெரியதொரு பள்ளத்தாக்கில் ஆகாய ஊஞ்சல்களில் ஊஞ்சலாட சற்றே அதிக நுழைவுக் கட்டணம் செலுத்தி ஜோடிகளை உட்கார வைத்து, தள்ளி விட இரண்டு பேர் ஒரு ஊஞ்சலுக்கென்று. போட்டோக்கள் மட்டும் எடுத்த பிறகு பல படிகளில் மீண்டும் உயரே வர மூச்சு வாங்கியது. அசதிக்கு சுகுமா என்ற இளம்பெண்ணின் உபசரிப்பும், அருமையான காப்பியும் நாங்கள் நால்வர் 10000 ருப்பையா ( 60 INR) ஒன்றுக்கென சூடாக அருந்திய பிறகு, ஷட்டில் பஸ்ஸில் ஏறி பஸ் நிறுத்துமிடத்தில், எங்கள் பஸ்களில் ஏறி உபுட் மார்க்கெட் அடைந்தபோது மணி ஆறேகால். ஏழரை மணிக்குள் திரும்ப வேண்டும் என்ற அறிவுப்புடன் , கடைத் தொடர்களை வலம் வந்து, கூட்டம் குறைவான முதல் மாடியில், 2,50,000 ருப்பையா என்பதை 80000க்கு விலை குறைத்து சில பாலி சர்ட்கள் வாங்கிய போது மனது பெருமிதமடைந்தது. இரவு உணவை முடித்து, ரிசார்ட் அடைவதற்கு முன், நாளைக் காலை எட்டு மணிக்குப் புறப்பட வேண்டுமென அறிவிப்புடன் இன்றைய நாள் முடியும் போது, நாளை நீர் அருவியில் பயணம் தொடரும் என உறங்கச் சென்றோம்.
( தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக