கம்போடிய வியட்னாம் சுற்றுலா (11/2/25 to 22/2/25)
சுற்றுலா என்பதே மனதுக்கு சுகம் தரும் நிகழ்வு. ஆனால் இன்றைய சுற்றுலா சோகத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்ற நாள். கொடுங்கோலன் Pol pot என்பவனின் இருண்ட ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட மக்களின் எச்சங்களைப் பார்வையிடுவது மனதைக் காயப்படுத்தாமல் இருக்க முடியாது. சீன அரக்கர்களின் துணையோடு செயல்பட்ட அவன் வெளி உலகிற்குத் தெரியாமல் இலட்சக் கணக்காணோரை சித்திரவதை செய்து கொன்று குவித்துள்ளான்.
அவ்வாறான ஒரு " Killing Field" கு முதல் விசிட். வீடியோவுடன் ஆரம்பித்து , கபாலக் கூடுகள், கிழிந்த துணிகளைக் காட்சிப்படுத்திய பெரிய டவர் கட்டப்பட்டு கண்ணாடி வழியாக பார்வைக்கு வைத்துள்ளனர். பூங்கொத்து ஒன்றை வைத்து வணங்கும் போது துயரம் மிகுந்தது. பெண்கள் ஆடைகளின்றி தன்னுடைய சவக் குழியை தாமே தோண்ட வேண்டிய கட்டாயம். ஒரே குழியில் பல உடல்கள். இங்கு மட்டும் 18000 பேரும், நாடு முழுவதும் மூன்று மில்லியனுக்கு அதிகமாகவும். குழந்தைகளை மரத்திலே அடித்துக் கொன்றதே் கொடுமையின் உச்சம்.
பாரக்கப் பார்க்க மனம் பதைத்தது. ஏனோ இவ்விடத்தில் இரண்டு் முறை நான் கீழே விழுந்து முட்டியில் அடி பட்டதால், நடப்பது சற்று சிரமமானது.
அடுத்ததாக மக்கள் சிறை வைக்கப் பட்ட பள்ளிக்கூடம் சிறையாக மாற்றப்பட்ட இடம். தப்பித்த சிலர் அங்கே காட்சிப் படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவரது வாழ்க்கை வரலாற்று புத்தகமொன்றை, கையொப்பத்துடன் பணம் செலுத்திப் பெற்றுக் கொண்டேன். வகுப்பறைகள் சிறைகளாக, கொடுமையான சித்திரவதை கதைகள், புகைப் படங்கள்.
தனக்கு அடிமையாக மட்டுமே வாழும் மனித சமுதாயம் வேண்டுமென்ற கொடுங்கோலனின் எண்ணமே இதற் கெல்லாம் காரணம்.
இதன் பிறகு அங்குள்ள ரஷ்யன் மார்க்கெட்டில் துவங்கியது நினைவுப் பொருட்கள் வாங்கும் படலம். மதிய உணவுக்குப் பிறகு Siem Reap நோக்கிப் பயணம் சாலை வழியாக. போகிற வழியில் வெள்ளிப் பொருட்கள் கைவினை நிலையம் ஒன்றைப் பார்வையிட்டு, பேருந்தில் அந்தாக்ஷரி, வினா விடை போன்றவற்றால் அனைவரையும் விழிப்புடன் வைத்து, Siem Reap அடைந்த போது பின் இரவாகி, உணவருந்தி, மறு நாள் செல்ல வேண்டிய அங்கோர் வாட் பற்றிய விவாதங்களோடு உறங்கப் போயாயிற்று. சூரிய உதயம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் நேரம் போதாது என்பதால் கை விடப்பட்டது. நீண்ட தூரப் பயணமாதலால் ( 300+ கிமீ) சோர்வில் கண்ணயர்ந்தோம். ஓட்டல்களில் அறைகள் வசதியான படுக்கைகளுடன்.
( தொடரும் சுற்றுலா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக