வியாழன், 12 ஜூன், 2025

சென்னை - அனுபவம் பலவகை ( Twist and Turns)

 சென்னை - அனுபவம் பலவகை ( Twist and Turns)

13/10 காலை புறப்பட்ட போது லால்பாக் எக்ஸ்பிரஸ் சில இடங்கள் நின்று சென்றதால், பெரம்பூர் அடைய அரை மணி் நேர தாமதம்.
பயணத்தின் போது நண்பர்களுடன் அளவளாவிய போது , நண்பர் சுரேஷ்( Ex colleague L&T, now settled in USA) அம்மாவை low bp காரணமாக மருத்துவ மனையில் அனுமதித்திருப்பதாகவும், முன்பு திட்டமிட்டபடி கோயம்பத்தூர், வால்பாறை, கேரளா போவது பற்றி புதனன்று முடிவு செய்யலாம் என்றும் கூறினார், சரியென்று சொல்லியிருந்தேன்.
முன்னமே பதிவு செய்த ராயல் பிளாசா வாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கிய போது, போலீசார் கூட்டமொன்று விசாரனை நடத்திக் கொண்டிருந்தனர். என்னவென்று விசாரித்ததில் , routine checking என்று சொன்னார்கள், ஆனால் எனக்கு அதன் அர்த்தம் பிறகு புரிந்தது. ஓட்டல் புதிய நிர்வாகம் எடுத்து புதுப்பிக்க ஆரம்பித்திருந்தார்கள். கூரை ஒழுகல், கரப்பான் பூச்சி, pest control மருந்து வாசனை வரவேற்றது. அறை நன்றாக மூன்றாவது மாடியில், 318 லிருந்து 312க்கு மாற்றம், மேனேஜரிடம் வாக்கு வாதம் இவைகளோடு பணம் ஏற்கனவே செலுத்தியதாலும், மழை நேரத்தில் மீண்டும் மாற்ற வேண்டாமெனவும் முடிவெடுத்தேன். மாலையில் நண்பர்கள் குணா மற்றும் அசோக் வந்த போது கீழே வந்து அவர்களோடு பேசி வெளியே வந்து தேனீர் அருந்தி, அறைக்குத் திரும்பிய போது,முடிந்தால் மறுநாள் வேட்டையன் படத்திற்குச் செல்லலாம் என முடிவெடுத்தோம்.
காலையில் நண்பர் சாம் மருமகள் வளைகாப்பு முடித்து, மதிய உணவுக்குப் பிறகு அறைக்குத் திரும்பிய போது , அசோக் மாலை வந்து என்னுடன் தங்குவதாகச் சொன்னார், மெதுவாக ஆரம்பித்த மழை வலுக்க ஆரம்பித்தது. சினிமாவுக்குச் செல்வது தடைப்பட்டது.
சுரேஷிடம் மீண்டும் பேசிய போது அவரது தாயின் உடல் நிலை கருதியும், மழை கருதியும், ( கோயம்பத்தூரில் இருந்து இன்னொரு நண்பர் காரில் பயணம் செய்வதாய் ஏற்பாடு) இப்பயணத்தைத் தள்ளிப் போடலாம், மற்றொரு முறை அவர் இந்தியா வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என. அதனால் இரயில் பயணச் சீட்டுகள், ஓட்டல் அறை ரிசர்வேஷன் அனைத்தும் மட மடவென கேன்சல் செய்யப்பட்டது. சென்னையிலிருந்து நான் பெங்களூர் திரும்ப சதாப்தி மாலை 5 25, 16/10 அன்று, புக் செய்யப்பட்டது.
இரவு உணவு நானும் அசோக்கும் பக்கத்தில் இருந்த காரைக்குடி மெஸ்ஸில் சாப்பிட்டு, உரையாடி, பிக் பாஸ் பார்த்து உறங்கியானது. 15/10 காலை அசோக் வீட்டுக்குப் புறப்பட்ட பிறகு, நண்பர் சாம் அழைப்பின் பேரில் டாக்ஸி புக் செய்து போன போது மூன்றே கிமீ தூரத்துக்கு நானூறு ரூபாய் மழை காரணம் காட்டி ஓலா கொள்ளையடித்தது.
மழை வலுக்க ஆரம்பித்தது, முந்தைய இரவின் தொடர்ச்சி. காலை உணவு சாம் வீட்டில், இட்லி, தோசை, மூன்று வித சட்னியோடு. மதிய உணவு திருமதி. சம்பந்தம் தயாரிக்க ஆரம்பித்த நேரத்தில், நானும் சாமும் பல மணி்நேரம் போராடி மியூச்சுவல் பண்ட் பதிவை சில காரணங்களுக்காக முடிக்க இயலாமல் போனது.
அதற்குள் நான் சதாப்திக்கு முன்னதாக மூன்றரை மணிக்கு லால்பாக்கில் புக் செய்து, சதாப்தி கேன்சல் செய்தேன். மதிய உணவு , பிறகு ஓய்வு ஆன பிறகு மாலை ஆறு மணிக்கு, இராதா பார்க் இன் சந்திப்பு, இராமன், சுரேஷ், நான் மழை வெள்ளம் காரணமாக கேன்சல் செய்யப்பட்டது. சுரேஷ் என்னைச் சந்திக்க அண்ணாநகர் சாந்தி காலனி ஸ்ரீ மித்தாய் வருவதாக இருந்ததும், விடாத மழையின் காரணமாக கேன்சல் செய்யப்பட்டது. நான் ஓட்டல் அறை திரும்ப இரண்டு முறை புக் செய்த டாக்ஸி்களை கேன்சல் செய்த ஓட்டுனர் களுக்கு நன்றி. நல்ல மனிதர், ஆட்டோ ஓட்டுனர், கொட்டும் மழையிலும், நியாயமான வாடகை வாங்கிக் கொண்டு ஓட்டல் வாசலில் நனையாமல் இறக்கி விட்டார். அவருக்கு நன்றி கூறி அறைக்குத் திரும்பி ஓய்வாக இருந்த போது ஒரு SMS, ,மழை நிமித்தம் லால்பாக் கேன்சல் செய்யப்பட்டதென.
திருப்பங்கள் பல ஒன்றன் பின் ஒன்றாக. பயணத்தைத் தள்ளிப் போடுவதா, தங்குவதா என மனதிற்குள் யோசித்த போது நண்பர் சாம் ஏர்போர்ட்டில் இருந்து அழைத்து சிங்கப்பூர் விமானம் சிறிது நேரத் தாமதத்தில் கிளம்புகிறது என்றும், நீ ஏன் விமானப் பயணம் செய்யக் கூடாது என்றார். ஆன் லைனில் செக் செய்த போது 16/10 , 13 40 Akasa Airlines கண்ணில் பட்டது, கட்டணமும் ஓட்டல் ஒருநாள் வாடகை அளவே. புக் செய்து நணபர்களிடம் கூறி , இரவு உணவு ஆர்டர் செய்து, உறங்கிய போது , சரியான உறக்கமில்லை.
நடுநடுவே விழித்தபோது மழை நின்றிருந்தது. காலையில் தேங்கியிருந்த நீர் மறைந்து வானம் வெளுத்திருந்தது. நணபர் சுரேஷ் என்னைச் சந்திக்க வந்தே விட்டார். அவர் கொண்டு வந்த பரிசுப் பொருள்கள் பெற்று,நன்றி சொல்லி, சங்கீதா ஓட்டலில் மினி டிபன் சாப்பிட்டு, அறைக்குத் திரும்பி ஆட்டோ பிடித்து, கோயம்பேடு மெட்ரோவில் டிரெயின் பிடித்து , ஏர்போர்ட் மூன்று மணி்நேரம் முன்னதாக வந்து இக்கட்டுரை எழுதி முடிக்கவும், ஆகாசா ஏர்லைன்ஸ் விமானம் லேண்ட் ஆகும் நேரம் நெருங்கவும் சரியாக இருந்தது. இத்தனை திருப்பங்கள் ஒரே பயணத்தில், முடிவு நல்லபடியாக, பேக் செய்து வந்த ஆடைகள் மீண்டும் பையில் அடங்கி, விமானத்தின் வயிற்றில் சென்று சேரக் காத்திருந்தன

கருத்துகள் இல்லை: