கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 16/2/25
காலையுணவுக்குப் பிறகு , கைட் பெல்லா வழி காட்டுதலுடன் முதல் விசிட் , செயற்கை முறை முத்துக்கள் வளர்க்குமிடம் பார்வையிடுதல். அதற்கென பிரத்யேக தண்ணீர் தொட்டிகளில் செறிவூட்டப்பட்ட முத்துக்கள் வளர்ந்தன.விதம் விதமான முத்துக்களும், அணிகலன்களும் காட்சிப் படுத்தப் பட்டுள்ளன. வாங்கும் உயரத்தில் இல்லை அதனால் பார்த்து விரைவில் வெளியே வந்த போது மழை தூறிக் கொண்டிருந்தது. முற்றிலும் மாறுபட்ட வெப்ப நிலை, கம்போடியாவுடன் ஒப்பிடும்போது, குளிரத் தொடங்கியது.
Halong நோக்கிப் பயணித்து , படகுத் துறையை அடைந்து, லைப் ஜாக்கெட் அணிந்து படகில் சுமார் 40 நிமிடம் பயணித்து Cruise நோக்கிப் பயணித்த போது சொர்க்க புரியில் நுழைந்தது போன்றிருந்தது. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த கடலில் பயணிப்பது, இயற்கை தான் எவ்வளவு அழகு என்பதை உணர்த்தியது. இரசித்தபடியே சென்று Cruise அடைந்த போது மதிய உணவு நேரம். Cruise நான்கு அடுக்காக, தங்கும், அறைகள், இரண்டாம் அடுக்கில், ரெஸ்டாரெண்ட், நான்காம் அடுக்கு ஓபன் Deck என அமைந்திருந்தது. நான் எதிர்பார்த்த கேளிக்கைகள் கூடிய பெரிய கப்பல்கள் எதுவும் தென்பட வில்லை.
கப்பலில் தங்குவதற்கு மட்டுமான ஒரு நாள் லக்கேஜ் எடுத்துச் சென்றிருந்தோம். கப்பல் நகர்ந்த படியே காட்சிகள் மாறிய படி இருந்தன. முதன் முதலாய் வியட்னாமிய உணவு முறைப்படி மதிய உணவு முடித்த பிறகு Bamboo boat சவாரி, ஒரு மலையைக் குடைந்த குகைக்குள் பயணித்த போது Lime Stone பாறைகள் கூர்மையாக தொங்கிக் கொண்டிருந்தன. படகோட்டி இலாவகமாக படகைச் செலுத்தினார்.
மீண்டும் கப்பலுக்குத் திரும்பிய பிறகு Speed boat பயணிக்க விரும்பிய நாங்கள் எட்டு பேர் மட்டும் படகில் ஏறிக் கொள்ள Halong Bay வின் அழகை மலைகளூடே இரசித்தபடி, அவரை வேகமாக போகச் சொன்னோம். 20 USD ஒருவருக்கு இப்பயணித்திற்காக. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், Kingkong, ஜேம்ஸ்பாண்ட் படம் என ஒவ்வொன்றாக படப்பிடிப்பு நடந்த இடங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பிய போது மாலை நெருங்கி இருந்தது. நான்காவது மாடிக்குச் சென்று விதம் விதமாக போட்டோக்கள் எடுக்க ஆரம்பித்த போது, கணவன் மனைவியர், Titanic காதலர்களாக மாறினர். இரவில் கப்பல் பயணிப்பது ஓரிடத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப் படுகிறது. பல cruise கப்பல்கள் வண்ண விளக்குகளில் மின்னின.
Happy Hour முடிந்து இரவு உணவு தயாரானது. உணவு முறைகள் மாறும் போது கிடைத்த ஏதோ ஒன்றை சாப்பிட்டாக வேண்டுமென்ற நிலைக்குத் தள்ளப் படுகிறோம். மறுநாள் விடியலில் Lime stone குகை ஒன்றுக்குப் பயணிக்கப் போகிறோம் என்று தெரிவிக்கப் பட்டது. பலரும் மீன் பிடிக்க தூண்டில் போட்டாலும் மீன் சிக்கவில்லை. கப்பலுக்கருகில் குளிக்கலாம் என்று சொன்னாலும் குளிர்ந்த நீரில் யாரும் நீந்தத் தயாராய் இல்லை. Kayaking எங்கள் குழுவில் யாரும் செல்லவில்லை.
( தொடரும் சுற்றுலா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக