வியாழன், 12 ஜூன், 2025

கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 19/2/25

 கம்போடிய வியட்னாம் சுற்றுலா - 19/2/25

காலையில் புறப்பட்ட பேருந்து Han Market எதிரே நின்றது. டிராகன் பிரிட்ஜ், பூக்கள் இவைகளைப் போட்டோ எடுத்த போது அறியவில்லை, இதே இடம் இரவின் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்குமென்று. Bana Hills என்ற மலையுச்சிக்கு கேபிள் பயணம் செல்ல அரை மணி நேரம் ஆகுமென்று தகவல் சொல்லப்பட்டது.
ஒரு சிறிய காட்டுப் பாதையில் பயணித்து, மலை அடிவாரத்தை அடைந்து, நுழைவுச் சீட்டுகள் பெற்று, கேபிள் கார் ஒன்றில் ஆறு முதல் எட்டு பேர் அமர்ந்து மேலேறத் தொடங்கியது. கீழே பள்ளத்தாக்கு, ஆறு, நீர்வீழ்ச்சி, மறு புறம் கடல் என இயற்கையை இரசித்தபடி் பாதி தூரம் கடந்த போது மழை பெய்யத் தொடங்கிய பனி மூட்டமும் கூடவே. புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை் பொழிகிறது என பாடத் தோன்றியது. கேபிள் காரில் இருந்து இறங்கி, பல எஸ்கலேட்டர்களில் பயணித்து உச்சியை அடைந்த போது மழை அதிகரித்தது. மழைக் கோட்டிலும், குடையிலும் அடைக்கலம் புக வேண்டியது ஆயிற்று.
மழை தூறிக் கொண்டே இருந்ததால் , மெதுவாக நடந்து பூக்களினூடே நின்று புகைப்படங்கள் எடுத்த போது, செயற்கையாக பனி மூட்டப் புகையை உருவாக்கி செலுத்தியதும் தெரிந்தது. முகங்கள் சரியாகத் தெரியாத போட்டோக்கள் எடுத்த பிறகு, மனிதக் கை போன்ற தோற்றமுடைய பாலத்தில் நடந்த போது, மழையும் கூட்ட நெரிசலும் அதிகரித்தது. பலரும் மழையில் நனைந்தபடி போட்டோக்கள் எடுத்தபடி , பனி மூட்டத்தில். சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வெவ்வேறு திசையில். மதிய உணவு ரெஸ்டாரெண்ட்டில் அளவிட முடியா கூட்டம் என்றாலும் பலவித உணவு வகைகள் சுவையாகவே இருந்தன.
மதிய உணவுக்குப் பிறகு Fantasy Park பயணம். பலவித விளையாட்டுகள், பம்பர் கார் முதல் இராட்டினம் வரை, நம்மூர் Amusement park போல. வளையம் எறிதல், பந்து எறிதல் வெல்பவர்கள்களுக்கு பரிசுகள் உண்டு. யாரும் வென்றதாகத் தெரியவில்லை. நண்பர்கள் பலரும் சிறியவர்களாக மாறிவிட்டனர்.
எல்லாம் முடிந்து மீண்டும் எஸ்கலேட்டர், கேபிள் காரில் இறங்கிய போது இருட்டியிருந்தது. பேருந்தில் மீண்டும் பயணித்து, டிராகன் பிரிட்ஜ் அடைந்த போது, அழகானதொரு காட்சி விரிவடைந்தது.
டிராகன் வடிவ விளக்கு பச்சை, நீலம், மஞ்சள் என நிறம் மாறிய படி. சிவப்பு நிற கொத்து விளக்குகள், சிங்க நிற தலை போன்ற சிலை வண்ண விளக்கில் என கண்ணைக் கவர்ந்தது. போட்டோக்கள் எடுத்துக் குவித்து, உணவு விடுதிக்குத் தயாரானோம். இந்திய உணவகங்களில், மதிய இரவு உணவும், காலை சிற்றுண்டி தங்கும் விடுதிகளிலும் என ஏற்பாடு செய்யப் பட்டிருந்தாலும், மதிய இரவு இந்திய உணவகங்களில் முப்பத்தெட்டு பேர் சாப்பிடுவது சற்று கடினமாகவே இருந்தது.
கிடைத்த நேரங்களில் எல்லாம் ஷாப்பிங் செய்வது இச்சுற்றுலாவில் கொஞ்சம் அதிகம். டாங் என்ற வியட்னாமிய கரன்சி என்னிடம் அதிகம் இருந்ததால் நான் நடமாடும் Money Exchanger ஆக மாறினேன். தங்கும் ஓட்டலை அடைந்த போது அனைவரும் மிகவும் சோர்வடைந்து இருந்ததால், ஒரு சில மணித்துளிகள் மட்டும் கடற்கரையில் அமர்ந்து அறைக்குத் திரும்பி, அடுத்த நாள் Ho chi Min விமானப் பயணத்திற்கு, பேக், செய்து உறங்கப் போனோம்.
( தொடரும் சுற்றுலா)
All reactions:
Santhi Raman Appo, Prasad Gupta Doolapeta and 7 others

கருத்துகள் இல்லை: