சனி, 25 ஜூலை, 2020

நெடுங்கதை - 2

அத்தியாயம்-2
கிராமம் உறக்கத்திலிருந்து விழிக்காத காலைப்பொழுது. சூரியன் மெதுவாக மலை உச்சியிலிருந்து எட்டிப் பார்க்கிறான்.
சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்தக் கிராமத்தில் நூறு குடும்பங்ஙளுக்கும் மிகாத வீடுகள். குடிசைகளாய் இருந்தவை இரண்டு அல்லது மூன்று அறை வீடுகளாகவும் மற்றவை சற்றே பெரிதான மாடி வீடுகளாகவும்.
ஊருக்குள் இன்றும் தார்ச்சாலையில்லை. பேருந்துகள் எல்லையோடு திரும்பி விடும். வானம் பார்த்த பூமியாதலால் பெரும்பாலும் புன்செய்ப் பயிர்கள். நெல்லும் வாழையும் சில மாதங்களில்.
நமது நாயகி பொம்மாயியும் நாயகன் குப்பனும் உறங்கிக் கொண்டிருப்பதால் நாம் ஊரைச் சுற்றிப் பார்க்கிறோம். குப்பனின் தந்தை மாடுகளைப் பூட்டி கிணற்றில் இருந்து கத்தரிக்காய் தோட்டத்திற்கும் சேப்பங்கிழங்கு தோட்டத்திற்கும் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.
கிராமத்துத் தெருக்கள் சாணமிட்ட பரப்பில் புள்ளி வைத்த கோலங்களுடன். விடியாத காலையிலே பெண்களுக்கு முதல் வேலை அதுவே.
கிராமப் பெண்கள் தங்கள் காலைக் கடன்களை முடித்து அன்றைய நாளை ஆரம்பித்து வைப்பர்.
செம்மறி ஆடுகள் பட்டிக்குள். கறவை மாடுகள், காளை மாடுகள் தொழுவத்தில். சாணமும் மூத்திரமும் கலந்த வாசனை எப்போதும்.
ஏரிக்கரையில் சில பெண்கள் துணி துவைக்கும் சத்தமும் சிலர் மார்போடு கட்டிய உள்ளாடையுடன் குளியலும் தங்களுக்குள் பேசிக் கொள்ளும் ஊர்க்கதைகளும் கலந்திருக்கும்.
தென்னந்தோப்பு ஊர் எல்லையில் குப்பனின் ஒன்று விட்ட மாமனுடையது. அதனூடே பெரிய கிணறு படிக்கட்டுகளுடன். குப்பன் நீச்சல் கற்றுக கொண்டதும் தினமும் குளியலும் இங்கேதான்.
ஊரே பச்சையாகச் காட்சியளித்துக் கொண்டிருந்தது. வயல்களைச் சுற்றி பனைமரங்கள். கிராமத்துத் தெரு முனையில் டீக்கடை. சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது.
பல் விளக்கி விட்டீர்களா. வாருங்கள் ஆளுக்கு நான்கு இட்லி சாப்பிடுவோம்.
(தொடரலாம்)

கருத்துகள் இல்லை: