வியாழன், 22 மார்ச், 2018

முதல் காதல்

முதல் காதல் முடியாக் காதல்
நிலவே நீ இல்லாது போனதனால்
விண்ணில் உலவுமந்தத் தாரகையும்
ஒளியிழந்து போனதடி
காதலின் வலியில் கருத்தரித்த கவிதை
ஆண்டுகள் பலவாயினும்
வாழ்க்கை வட்டத்தில்
வாலிபக்காதல் மனதில்
வந்துவந்து போகும்
வாசலில் கோலமிட்டு என்
வாழ்க்கையில் வண்ணமிட நினைத்தவளே
கோல
ம் கலைந்து கேரளம் சென்றாய்
உன் நினைவுகள் சுமந்தேன்
காலச்சக்கரம் உருண்டோடும் நேரம்
உன் நினைவுகள் மெல்ல மெல்ல மறைந்து
உலகவெளியில் உறைந்து போனது
எனக்காக நீ வடித்த கண்ணீரும்
காற்றில் கரைந்து
கால ஓட்டத்தில் கலந்தது
சிட்டுக்குருவியாய் சிறகடித்து வந்து
சிறிதேனும் உனைக்கண்டு வரவா ?

மனிதம்

 மனிதம் மரித்துவிட்டதோ
ஐயுறும் அவலம் அவ்வப்போது
கூட்டுக்குடும்பம் பிரிந்தது
கூடி வாழ்தல் அரிதானது
காதல் குறுகி காமம் மிகுந்தது
கருணையில்லா இதயங்கள்
காசுக்காகவே வாழும் உன்மத்தர்கள்
எதற்கும் துணிந்த எத்தர்கள்
எரியும் உள்ளத்து நெருப்பில்
எண்ணெய் ஊற்றும் ஈனர்கள்
அமைதி அன்பு அடுத்தோர் துயர்நீக்கல்
அரிதாய்ப் போனது அய்யகோ
எங்கே போகிறோம் மனிதா ?
எரிதழல் எரியூட்டும் உடலை !

கவிஞன் காதல்

கவிஞன் காதல் மறக்கலாகாது
கற்பனை ஊற்றே அதுதானே
தேன்வந்து பாயும் காதில்
தேவதை உன் சொல்லின் மகிமை
வார்த்தைகள் வர்ணங்களாகும்
வரவே தென்றலாகும்
கூடுவிட்டு கூடுபாயும்
இதயக்கூடுகள் இடம் பெய
ரும்
இன்பம் இயற்கையாகும்
இரவும் பகலும் ஒன்றாகும்
காதில் விழும் உன் சொற்கள்
கன்னலாய் இனிக்கும்
கனவு நனவு சேர்ந்திருக்கும்
காதலின் வலிமை சொல்ல
காலமெல்லாம் போதாது
வாலிபம் வயோதிகம்
வேற்றுமையில்லை
வாழும் நாட்கள் முழுதும்
வந்து வந்து போகும் !

மாற்றம் நல்லதே

மன வலிமை ஒன்றே
மனக்கசப்பு தீர்க்கும்
மனித நேயம் மறைந்து
மக்கள் குமுறும் நாளில் 
மாயெரும் புரட்சி வெடிக்கும்
மாய உலகு இது
மறைக்கப் படும் உண்மைகள்
அரக்கு மாளிகைகள்
அனல் நெருப்பில் அழிந்துபோம்
நன்மை தீமை அறிதலும்
மானிடன் மறந்தான்
மாற்றம் நல்லதே மனிதா
மக்கள் நலனுக்கே என்றால் !

தீ

தீயொரு தெய்வமென்னு
தினமும் வணங்கினோம்
கடவுளர்க்கிணையாக
கற்பூர ஆரத்தி எடுத்தோம்
காட்டுத்தீயாய் நீயோ
கருகச் செய்தாயே !
கன்னியர் முதலாய்!
கருணை இலையோ
கடின மனமோ ?
ஏன் இந்த வேதனை ?
எம் குலத்தோருக்கு !
சாம்பலாய்ப்போ நீ !
சாபம் ஏற்றுக்கொள் !

தமிழ்மண்

கவிஞர் கணல் போன்றவர்
காணும் காட்சியின் கொடுமை
மனதினுள்ளே கசப்பு
காலம் காலமாய் ஒற்றுமை
கருத்தினில் இருத்திய தமிழ்மண்
கண்டவர் அழித்திட
கண்ணுற்று இருப்போமா ?
நல்லவை மட்டுமே நாடும்
நன்மக்கள் வாரீர் !
நல் பயிர் நடுவே
களையெடுத்தல் வேண்டும்
தலையில்லாத தனிமை
தவறேதும் சகியோம்
கொள்வது எல்லாம்
குணமதின் உயர்வே !
மாற்றாரை மதித்து
மனம் ஏற்பது நாமே !
அரவணைப்பின் அன்பை
அழிக்கப் பார்க்காதீர் !
சாம்பல் என்றெண்ணி
சாக்கடையில் தள்ளாதீர்!
கணல் சுடர்விட்டெறிந்து
சுட்டுவிடும் உம்மை!

ஏக்கமும் தூக்கமும்

ஏக்கமும் தூக்கமும்
ஏன் படைத்தாய் இறைவா ?
ஏக்கம் தாக்கம் தாபம்
கோபம் கொடியது அன்றோ !
சிறுபொழுதேனும் தூக்கம் வேண்டும் 
சீரிய சிந்தனை இல்லாத்தூக்கம்
சிறிய வயதில் சில காலம்மட்டும்
கால மாற்றத்தில் கற்பனை பலப்பல
காட்சிகள் கண்முன்னே
கண்கள் மட்டும் உறங்க மறுத்தன
காதல் காமம் கவலை எல்லாம் சேர்ந்த எண்ணக்கீற்று
எனது உறக்கம் மறுத்தது
அமைதிப் பூங்காவாய் மாற்று
அப்போதாவது தூக்கம் என்
கண்களைத் தழுவும் !

விடியட்டும்

விடியட்டும் காத்திருந்தேன்
விடிவெள்ளி முளைத்தநேரம்
என்னுள்ளே தோன்றும்
எண்ணங்கள் உருப்பெறுமோ ?
பேதங்கள் அற்ற மானிடம்
பேதமை இல்லா பெரியோர்
சாதிகள் இல்லா சமுதாயம்
சாத்திரம் அறிந்த சான் றோர்
அன்னசத்திரம் ஆயிரம்
அனைவர்க்கும் கல்வி
அணைகள் ஆங்காங்கே
அள்ளக்குறையா நீரோட்டம்
இவையனைத்தும் இணைந்த
இயற்கை வளமும்கூட
நினைக்கவே ஆனந்தம்
நித்திரை கலைந்ததுவே !

கலங்காதிரு மனமே

இடிப்பாரை இல்லா எவனும்
துடிப்பாய் செயல்பட இயலாது
இருப்பினும் இடம் பொருள் பார்ப்பதுண்டு
விழலுக்கிறைத்த நீர் புல்லுக்கு மட்டுமே புசிதல் உசிதமல்ல
வானத்து நீர் போன்ற உம்கருத்து
வயலுக்கும் பாயும்
இரவென்று ஒன்றுண்டேல்
பகலென்றும் உண்டு
பருவங்கள் மாற்றம்போல்
நன்மை தீமைகள் மாறும்
மாயவன் விளையாட்டு
தேடி நிதம் நீர் சொல்லும் வார்த்தை
தேடிப்போய் சேரும் உரியவர்க்கு
கலங்காதிரு மனமே
காற்று இத்திசையிலும் வரும்