திங்கள், 30 ஜூலை, 2007

கடவுள்

கல் தோன்றியதும் பின்பு மண் தோன்றியதும்
கடல் தோன்றியதும் காலம் தோன்றியதும்
காற்றும் பூமியும் வானும் நிலவும்
நீரும் நெருப்பும் மனிதனும் மாக்களும்
நட்சத்திரம் முதலாய் விண்வெளி கோள்கள்
யாவும் தோன்றியது உன்னால் இறைவா !

வானும் நிலமும் ஒன்றை ஒன்று தொட்டு
பரவி கிடந்த உலகத்தை உன் சொற்களே
வெவ்வேறாய் பிரித்தது என்பர் பெரியோர்
எங்கும் பசுவெளி எங்கெங்கும் நீரோடை
வயல் வெளி தோறும் பசுமை தோற்றம்
மலை முகடுகளில் மேக மூட்டம் !

மூங்கில் கீற்றினிலும் புல் நுனியிலும்
முதல் நாள் இரவின் பனித்துளிகள்
காட்டருவி கிளிக்கூட்டம் குயில் கூவல்
புள்ளி மான்களின் துள்ளல் மயில் ஆட்டம்
புள்ளினங்கள் கூடு தேடும் அந்தி நேரம்
எத்தனை சுகங்கள் நங்கள் கண்டோம் கேட்டோம் !

உணவென்றால் விளைந்தது உண்டு வாழ்ந்தோம்
இரப்பவற்கும் கொடுத்தோம் இறைவன் உனக்கும் படைத்தோம்
நீர்நிலை தோறும் நிறைந்து இருந்ததனால்
நிலம் தோறும் பயிர் வைத்தோம் நெல்மணி
நெடுங் கரும்பு பயறு வகைகள்
நான்கு திசை சென்று நல்வழி கற்றோம் !

வந்தது புரட்சி வையத்து நாடுகளில்
மண்ணிலே மனிதனை மனிதன் மாய்த்துக்கொண்டான்
நிலம் முதல் நீர் வரை தனதென்றான்
பேசும் மொழியிலும் பழகும் மதத்திலும்
பேதங்கள் கொண்டு வந்தான் பொறாமை வளர்த்தான்
பொறுமை இழந்தான் பொய் புரட்டும் கற்றான் !

ஒருவன் கடவுள் எங்கே என்றான்
மற்றொருவன் கடவுள் காணும் இடம் எல்லாம் என்றான்
வார்த்தைகள் வளர்ந்து எங்கும் பிரிவு
பகை வளர்த்து நாடுகள் பகடைக் காய்களாயின
இப்போது பசுமை எங்கே பாசம் எங்கே
அண்ணன் எங்கே தம்பி எங்கே அன்பு மகன் எங்கே !

அன்னை பூமியிலே ஆண்டவனே என்ன விளையாட்டு
அனைத்தும் தெரிந்த நீ அமைதி காப்பதேன் !
அடுத்தவர் துன்பம் அழிப்பவன் நீயல்லவா ?
அன்பும் அரவணைப்பும் குறைந்து பண்பும்
பாசமும் மறைந்து பாதகங்கள் பெருகி
எங்கே போகிறோம் நங்கள் ? இறைவா வழி காட்டு !

கருத்துகள் இல்லை: