வெள்ளி, 13 ஜனவரி, 2017

தேசியம்

 எனக்காகவும் உனக்காகவும்
தமிழுக்காகவும்
தலை வணங்குகிறேன்
தொன்மை மொழியென்றாலும் ஆதிக்கம் செலுத்துவோர்பலர்
வீரமரபில் பிறந்தும்நாம்
தன்னடக்கம் மிகுந்த இனம்
வீர விளையாட்டு உலகில் பலவுண்டு
தினவெடுத்த எம் தோள்கள் சிலம்பம் சுற்றக் கண்டீரா ?

வெட்டுதல் குற்றமில்லை உண்ணுதல் குற்றமில்லை
உலக மக்களுக்கு உணவாய் ஆக்குதல் குற்றமில்லை
ஆயின் என் இனத்து வீர மறவர் ஏறுதழுவுதல் குற்றமென்றீர்
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது இதுதானோ

மனிதனை மனிதனே மாய்ப்பதெல்லாம் போர்முனையில்
நாட்டைக் காக்க தவறில்லை அது
விலங்கினும் கேவலமாய் வீரர்கள் எல்லையில் தவறில்லை அது
தண்ணீர் தரமறுக்கும் அண்டை மாநிலம் சட்டம்மீறினால் தவறில்லை

அண்டைநாட்டினில் எம் இனத்தோர் நாயைப்போல் சுட்டுக்கொன்றாலும் குருடனாய் இருப்போம்
ஆனாலும் வீரவிளையாட்டு நடந்தேற விடவேமாட்டோம்
அந்நிய நாட்டு அடிமைகள்இன்னும்நாம்
சுதந்திரம் என்பதும் தேசியம் என்பதும் வெறும் பேச்சே


ஞாயிறு, 1 ஜனவரி, 2017

எதிர்காலம் என்பதே ஓர் எதிர்பார்ப்பு தானே

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது இன்று
எங்கும் கொண்டாட்டம் புத்துணர்ச்சி
எதிர்பார்ப்பு எவ்வளவோ எது நிறைவேறும்
எதிர்காலம் பதில் சொல்லும்

கடந்த காலம் மறந்து நிகழ்காலம் நுழைவோம்
கற்பனைக்கும் எட்டாத எவ்வளவோ நிகழ்வுகள்
ஒன்றொன்றாய் கண்முன்னே நடந்தேறின
ஒவ்வாத காட்சிகள்தான் செயலற்றோம்

நெஞ்சு பொறுக்குதிலை நேர்ந்த கதை நினைந்துவிட்டால்
உயர்ந்த மனிதர் பலர் இறவாப் புகழ் எய்தினர்
ஊழ் வந்து சேர்ந்தது போல் வார்தா புயல்
உள்ளூர் அரசியல் குழப்ப மாற்றம்

மக்கள் மட்டுமே மேலும் மேலும் துயருற்றர்
மாளிகை வாசிகள் ஊழல் அதிகாரிகள்
மக்கள் பணத்தை தனதாக்கிய தறுதலைகள்
மாற்றம் இல்லாமல் மகிழ்ந்திருந்தர்

இதுமட்டுமல்ல இதுபோன்று பலவும் கடந்த ஆண்டில்
புத்தாண்டில் இனிதானவை மட்டுமே வேண்டுவோம்
என்றும் போல் இன்றும் எதிர்பார்ப்போம்
எதிர்காலம் என்பதே ஓர் எதிர்பார்ப்பு தானே