வெள்ளி, 22 டிசம்பர், 2017

எம்மோடு ஒன்றியது

விடியலில் வீசிடும் குளிர்காற்று
உதிக்கும் கதிரவனின் செந்நிறக் கீற்று
கூட்டைத் துறந்த புள்ளினங்கள் ஓசை
மார்கழித் திங்களில் மாக்கோலம் நடுவே பூசணிப்பூ
ஏர்க்காலில் காளைகள் பூட்டி ஏய் என்ற ஓசை
என்றுமே எங்கள் கிராம
வாழ்க்கை
எளிதானது எம்மோடு ஒன்றியது !

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கடற்கரை

கடற்காற்று காலம் கடந்த காற்று
காதல் வயப்பட்டோர்
காசு பணமற்றோர
காரிகையோடு கைகோர்ப்போர்
காரில் கானம் கேட்போர்
காலாற நடப்போர்
காவியம் படைப்போர்
காற்று வாங்க வருவோர்
கன்னியர் காளையர்
கடலோடும் மணலோடும்
கலந்தாடும் சின்னஞ்சிறியோர்
இவையாவும் இங்குண்டு
இரவென்ன பகலென்ன!

வெள்ளி, 17 நவம்பர், 2017

வாழ்ந்த நாட்களும் வரும் நாட்களும்

நட்பென்ற இலக்கணமே நாமென்றானோம்
பறந்து திரிந்த பறவைகள் கூடுகள் அடைதல்போல கூடினோம்
வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டோம்
கருத்தில் முரணென்றாலும் கண்ட நட்பு கரும்பினும் இனியது
வாலிபர் என்றும் நாங்கள் வயதொரு எண்ணே
வலிகள் உள்ளத்தின் ஆழத்தில் இருத்தி இறுக்கப் பூட்டி வைப்போம்
வாழ்ந்த நாட்களும் வரும் நாட்களும்
இனிய வரிகளே எங்கள் புதினமதில்
இனி வரும் காலங்களும் எங்களின் இளமைக் காலங்களே
மார்க்கண்டேயர்கள் நாங்கள் வரம்பெற்று வந்தோம் !

அவளது கடிதம்

அவளாகவே அனுப்பிய கடிதம் 
அலை பாய வைத்த வயது
தூக்கம் தவிர்த்த துக்க நாட்கள்
துயரம் துடைத்த தூயநட்பு
இளமையில் கல் காதலும் கொள்
இருவேறு உணர்வுக் கூற்று
உன்னவளை நான் கண்டதில்லை
உள்ளம் மட்டும் புரிந்து கொண்டேன்

திங்கள், 25 செப்டம்பர், 2017

பிறந்த நாள் இன்று பிறந்த நாள்

ஆண்டொன்று  போனால் வயதொன்று போகும்
ஆண்டவன் கணக்கில் என்றும் மாற்றமில்லை
வாழ்க்கையின் பாடம் வழங்கிடும் பட்டம்
வயதான இளமைக்கு வாயிற் கோலம்

பிறந்த போது அறிவதில்லை யாரும்
பிறிதொரு நாளில் எவராய் ஆவோமென்று
நம்மில் பலரும் எளிமையின் விளிம்பில்
நர்த்தனமாடிய நாட்டியக்காரர் தாம்

உயர்வு எளிதாய் யாருக்கும் கிட்டவில்லை
உழைப்பென்ற முதலீட்டின் உதிர்ப்பு தான்
விதைக்கின்ற வித்தின் பொருட்டே விருட்சம்
வினை விதைத்தவன் வினை அறுத்தான்

பத்துப் பத்தாய் பகிர்ந்து பார்
பாதையின் வளைவுகள் நெளிவுகள்
பயின்ற வித்தைகள் பகிர்ந்த நாட்கள்
பலவற்றின் பரிசே இப்போதைய வாழ்வு


உறவுகள் ஒரு தொடர்கதையாய் உன்னுடன்
உண்மை நட்பும் உறவாடிய உள்ளமும் உன்னுடன்
உறக்கம் அற்ற இரவுகள் கடந்து
உண்மை உறக்கம் உன்னுடன் இன்று


மூலக்கூறு எவையெவை  ஆராய்ச்சி தேவையில்லை
மூவிருபது அகவை முடிந்த பின்னாலும்
அசை போட ஆசை இருப்பின் வாழ்க்கைப் புத்தகம்
அத்தியாயங்கள் ஒவ்வொன்றாய் அலசிப்பார்த்திடு !




வியாழன், 13 ஏப்ரல், 2017

என்று தணியும் எங்கள் தாகம்

ஹே விளம்பி ஆண்டாம் பிறப்பது நாளை
நீ விளம்பு இன்று நமது நிலை என்ன
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் சரியில்லை
அதனால் அடுத்தடுத்து போராட்டம்
அரசியல் இன்று அடிமட்டத்தில் ஆர் கேட்பார்
அடுத்த வேளை கஞ்சிக்கே வழியில்லை
ஆனால் அவனால் தான் நீ இன்று
அரிசிச் சோறு நித்தமும் உண்கின்றாய்
வீதியில் இறங்கி போராடும் நிலை
விளக்கம் கேட்க மறுக்கும் தலைவர்
கணக்கிட்டே கடன் வாங்கி கட்டாத
கயவர்கள் நாடு விட்டு வேற்று நாட்டில்
வானம் பொய்த்து வயலும் காய்ந்து
வயிற்றுக்கு வகையாய் உணவு எங்கே
இவன் வாங்கிய கடன் சிறிதளவே
ஆனாலும் அச்சுறுத்தல் அதிகம்
குடி குடியை கெடுக்கும் விளம்பரத்தில்
குடியைத் தடுக்க கோரும் பெண்டிர்
குலக் கேடியின் கரத்தில் குத்துப்படுவர்
குடியரசா அன்றி கொடுங்கோல் அரசா
தலைவன் இல்லாத தவிக்கும் நாடாயிற்றா
தாங்காது இனிமேலும் தவிக்கிறது உள்ளம்
எழுச்சிப் போரில் எம் இளைஞன் இன்று
என்று தணியும் எங்கள் தாகம்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

தேசியம்

 எனக்காகவும் உனக்காகவும்
தமிழுக்காகவும்
தலை வணங்குகிறேன்
தொன்மை மொழியென்றாலும் ஆதிக்கம் செலுத்துவோர்பலர்
வீரமரபில் பிறந்தும்நாம்
தன்னடக்கம் மிகுந்த இனம்
வீர விளையாட்டு உலகில் பலவுண்டு
தினவெடுத்த எம் தோள்கள் சிலம்பம் சுற்றக் கண்டீரா ?

வெட்டுதல் குற்றமில்லை உண்ணுதல் குற்றமில்லை
உலக மக்களுக்கு உணவாய் ஆக்குதல் குற்றமில்லை
ஆயின் என் இனத்து வீர மறவர் ஏறுதழுவுதல் குற்றமென்றீர்
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது இதுதானோ

மனிதனை மனிதனே மாய்ப்பதெல்லாம் போர்முனையில்
நாட்டைக் காக்க தவறில்லை அது
விலங்கினும் கேவலமாய் வீரர்கள் எல்லையில் தவறில்லை அது
தண்ணீர் தரமறுக்கும் அண்டை மாநிலம் சட்டம்மீறினால் தவறில்லை

அண்டைநாட்டினில் எம் இனத்தோர் நாயைப்போல் சுட்டுக்கொன்றாலும் குருடனாய் இருப்போம்
ஆனாலும் வீரவிளையாட்டு நடந்தேற விடவேமாட்டோம்
அந்நிய நாட்டு அடிமைகள்இன்னும்நாம்
சுதந்திரம் என்பதும் தேசியம் என்பதும் வெறும் பேச்சே


ஞாயிறு, 1 ஜனவரி, 2017

எதிர்காலம் என்பதே ஓர் எதிர்பார்ப்பு தானே

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது இன்று
எங்கும் கொண்டாட்டம் புத்துணர்ச்சி
எதிர்பார்ப்பு எவ்வளவோ எது நிறைவேறும்
எதிர்காலம் பதில் சொல்லும்

கடந்த காலம் மறந்து நிகழ்காலம் நுழைவோம்
கற்பனைக்கும் எட்டாத எவ்வளவோ நிகழ்வுகள்
ஒன்றொன்றாய் கண்முன்னே நடந்தேறின
ஒவ்வாத காட்சிகள்தான் செயலற்றோம்

நெஞ்சு பொறுக்குதிலை நேர்ந்த கதை நினைந்துவிட்டால்
உயர்ந்த மனிதர் பலர் இறவாப் புகழ் எய்தினர்
ஊழ் வந்து சேர்ந்தது போல் வார்தா புயல்
உள்ளூர் அரசியல் குழப்ப மாற்றம்

மக்கள் மட்டுமே மேலும் மேலும் துயருற்றர்
மாளிகை வாசிகள் ஊழல் அதிகாரிகள்
மக்கள் பணத்தை தனதாக்கிய தறுதலைகள்
மாற்றம் இல்லாமல் மகிழ்ந்திருந்தர்

இதுமட்டுமல்ல இதுபோன்று பலவும் கடந்த ஆண்டில்
புத்தாண்டில் இனிதானவை மட்டுமே வேண்டுவோம்
என்றும் போல் இன்றும் எதிர்பார்ப்போம்
எதிர்காலம் என்பதே ஓர் எதிர்பார்ப்பு தானே