திங்கள், 31 டிசம்பர், 2012

புது யுகம் புது ஆண்டு எப்போதோ

புதியதொரு ஆண்டு தொடங்கும் நாள் இது
பிழைத்திருப்போமா என்ற எண்ணம் போய் 
பிறிதோர் நாளும் பிறந்து மயன் மாயமாய் போனது 
பிரளயம் ஏதும் இல்லாமல் பிரிந்தது 2012

வேறொரு பிரளயம் மக்கள் உள்ளங்களில் 
வெறியின் உச்சத்தில் மனிதர்கள் மாக்கள் ஆனது 
உலகமே திரும்பிப் பார்த்தது வெறும் நிகழ்வாய் கொள்ளாமல் 
உயிர் பிரிந்தாலும் உலகை உருக்கிய பெண்மையின் வீரம் பேசப்பட்டது 

மாற்றம் ஒன்றே நிரந்தரமானது என்றால் மனித மனங்கள் ஏன் மாறுவதில்லை 
தன்னலம் கருதா பிறர் நலம் பேணும் மனிதம் எங்கே போனது 
மதங்களின் பேரால் நாட்டின் பேரால் மொழியின் பேரால் நதிகளின் நீரால் 
இன்னும் எதனால் எல்லாம் இந்த மனிதன் வேற்றுமை போற்றுவான் 

எனக்கு மட்டுமே சொந்தம் என்ற சுயநலம் இங்கே புரையோடிப் போயிருக்கிறது 
என்னைச் சார்ந்தவர்  வாழ்ந்தால்  போதும் மற்றவர் மடிந்தால் எனக்கென்ன என்பர்  
எங்கே போகிறோம் நாம் சாத்தானின் வேதம் தலைக்கேறி விட்டதா 
எதற்கும் ஒரு விடியல் உண்டு என்றால் இதற்கும் விடியல் வேண்டாமோ

முன்பே நான் கூறியது தான் வேற்றுமை பாராத உலகம் வேண்டும்  
மூர்க்கர்கள் இல்லா புதியதோர் சமுதாயம் வேண்டும் 
காந்தி சொன்ன வார்த்தைகள் எப்போது நிறைவேறும் 
பெண்ணென்பவள் தனிமையில் நடுநிசியில் செல்லும் அந்த நாள் 

நாடுகள் போர் தொடுக்கும் பகைமை பொய்த்து 
நானிலம் தழைக்க நீர் வளம் மின் வளம் 
பசுமை புரட்சி பட்டினியற்ற வயிறுகள் 
பரந்த நோக்கு பல்வளம் பெருக்கம் 
இவையனைத்தும் இவ்வுலகில் நிகழ்ந்திடும் நாளே 
புதிய ஆண்டாய் புதிய யுகமாய் கொண்டாடும் நாளாம்