திங்கள், 30 ஜூலை, 2007

தவம் செய்து கிடைத்தவளே

ஆண்டாண்டு காலமும் தவமிருந்து பிள்ளைகள்
பெற்றதாய் சொல்வார்கள் ..
ஆண்டுகள் பல காத்திருந்தேன் காதலி உனக்காக
குறிஞ்சி மலர் கூட பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும்
மெல்லியலாள் நீயோ நான்கு முறை குறிஞ்சி மலர்ந்தபோது வந்தாய்
வந்ததும் வந்தாய் வெள்ளி சிரிப்புடன் வந்தாய்

உனது மெல்லிய விரல்கள் நீவி வைரம் தோய்க்க வேண்டும்
வலியில்லாமல் ஒவ்வொன்றாய் சொடுக்கி நகக் கண்களில்
மருதாணி இட்டு சிவந்த அந்த அழகை
இன்று மட்டுமல்ல என்றென்றும் பார்த்திருக்க வேண்டும்
உன் புருவ கீற்றுகளில் கரு மை தீட்டி
கண் இமைகளில் மேலும் தடவி மீன் ஒத்த விழிகளால் என்றிட வேண்டும்

இலக்கண கட்டுப் பாட்டில் வார்த்தைகள் தேடி
கவிதை அமைப்பது கடினம் அதனால்
காட்டாற்று வெள்ளமாய் வரும் என்ன நீரோட்டத்துக்கு
தடை ஏதும் இல்லாமலே தனிப்பாடல் எழுத விழைந்தேன்
யாரோ சொன்னார் மூங்கினிலே காற்று நுழைந்து கீதம் தோன்றும் என்று
இங்கே உன்னில் நுழைந்த காற்று ஜீவ கீதமாய் என் காது மடல்களுக்கு

நீ சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்புக்கும் ஒரு கோடி பொற்காசு தரலாம்

உன் நாவில் தோன்றும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு வாழ்வை தரலாம்
நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் என் உயிரையே தரலாம்
உன் பார்வை மட்டும் எனக்கு கிடைக்குமென்றால் ஜென்மமெல்லாம் தரலாம்
நீ அருகினில் இருப்பதென்றால் என் ஆத்மாவே தரலாம்
உன் மூச்சு காற்றுக்கு எத்தனை பிறவி வேண்டுமாயினும் தரலாம்

கருத்துகள் இல்லை: