திங்கள், 30 ஜூலை, 2007

சின்னஞ்சிறு கிளியே

சின்னஞ்சிறு மலருக்கு இன்று பிறந்த நாள்
சிரித்து மகிழ்ந்து சுற்றம் சூழும் நாள்
புத்தாடை புனைந்து புத்துயிர் பெறும் நாள்
புதியதாய் பிறந்த நாளில் வாழிய பல்லாண்டு !

நீ பிறந்த போது மகிழ்ந்தனர் பெற்றோர்
நீ வளர்ந்த போது உவந்து பார்த்தனர்
உன் கனி மொழி வார்த்தை கற்கண்டாம் அவர்க்கு
உன் தங்க பாதங்கள் தாங்கின அவர் மார்பு

நீ சிரிக்கும் போதெல்லாம் முத்துக்கள் உதிர்ந்தன
நீ பேசிய மழலை வார்த்தைகள் அல்ல வைரங்கள்
பட்டாம் பூச்சி போல் நீ பறந்து திரிந்து வா
பட்டம் எழும்புதல் போல் வான்வெளியில் உலவி திரிந்து வா

பெரியவள் என்றொரு பருவமே வராமல்
பாடும் பறவையாய் நீ திரிந்து வந்தால்
எங்கள் உள்ளம் களிக்கும் உலகச் சுமை
உனக்கு வேண்டாம் எப்போதும் மகிழ்ந்திரு !

வெண்ணிலவில் குளித்து நட்சத்திரம் பிடித்து
சூரியத் தேரில் சுற்றுலா வரவேண்டும் நீ
சூழ்ந்திடும் தேவர்கள் மலர்கள் தூவ
சுற்றும் இவ்வுலகம் சுற்றி நீ வரவேண்டும் !

வந்து விடு ..வந்து விடு

நீ இல்லாத உலகில் எனக்கு உறக்கம் மட்டுமல்ல
நீரும் உணவும் இன்ன பிறவும் பிடிக்கவில்லை
உன் நினைவில் நான் உள்ளம் உருகி தினம் தினம்
உயிர் குறைந்து போகிறேன் ..வா வந்து விடு

புத்தி மட்டுமல்ல மனமும் பேதலித்து விட்டதால்
நான் நானாக இல்லை நீ நீயாக இருக்கிறாயா
சோகம் நிறைந்த உணர்வுகள் அவ்வப்போது
கண்ணீர் துளிகளாய் மாறுகின்றன ..வா வந்து விடு

வெறும் வார்த்தைகள் எனக்கு போதவில்லை
உணர்ச்சிகளை உருவப்படுத்தி உனக்கு அனுப்பவேண்டும்
உலகில் உள்ள காதல் வார்த்தைகள் போதாது
புதியதாய் வேண்டும் இன்னும் பல ..வா வந்து விடு

தினம் தினம் பேசினாலும் நினைவுகள்
நீ இருப்பதை உணர்த்தினாலும் உன்முகம்
நித்தமும் பார்த்து பார்த்து பூரிக்க
பேராசை எனக்கு ..வா வந்து விடு

தட கள ஓட்டத்தில் தடைகள்
ஒவ்வொன்றாய் தாண்டி நீயும் நானும்

ஓடி கொண்டிருந்தாலும் தூரத்திலே நீயும்
தொலைத்த இதயத்துடன் நானும் .. வா வந்து விடு

நான் இப்போது பேராசைக் காரன்..
உலகம் குறுகி நீ தொட்டு விடும்
தூரத்தில் எனக்கு வேண்டும் என்ன
தவம் செய்ய வேடும் ..வா வந்து விடு

வா வந்து விடு ..என்ற வார்த்தைதனை
எத்தனை முறை நான் உச்சரிக்க வேண்டும்
உன் காதுகளில் அவை நுழைந்து உன்னை
முழு உருவாய் இங்கு கொணர ..சொல்லடி கிளியே !

ஆசை…பேராசை

எனக்கொரு ஆசை நினைத்த போது நீ இருக்கும் இடம் வந்து சேர
எனது சுவாசம் முழுதும் நிரம்பிய உனது உயிர்மூச்சு
என்னுடன் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது
எத்தனை காலம் தான் இந்த சோதனை கண்ணே
எண்ணங்கள் மீது எனக்கு பொறாமை
ஏனெனில் அவை அடிக்கடி உன்னை தொட்டு பார்ப்பதால் !

பூமி ஏன் இத்தனை பெரியது அதனால் தானே
வானம் தொட்டு விடும் தூரம் என்றாலும்
உன்னை தொலை தூரம் வரை நான் காணவில்லை .
வையகம் குறுகிபோனால் நீ கூப்பிடு தூரத்தில்
வீதி தோறும் வெட்ட வெளியெங்கும் நாம் இணைந்தே திரிவோம்
காலையும் மாலையும் நம் கண்களுக்கு தெரியாது

வெறும் உறக்கம் போதும் அது உன் மடியினில் என்றால்
வேறெதுவும் வேண்டாம் வெறும் பேச்சே போதும்
நீ உதிர்க்கும் சொற்கள் என் உள்ளம் மட்டுமல்ல
உடல் வளர்க்கும் உயிர் துடிக்கும்
நீ பிறந்த மண்ணில் நான் பிறந்திருக்க வேண்டும்
நாளும் உனை காணாமல் நான் ஏங்கி போனேன் !

நீ அருகினில் இருந்தாலே எனக்கு எத்தனை சக்தி
உனது மேனியின் காந்த அலைகள் என்னை உயிர்ப்பிக்கும்
எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்வதென்றாலும்
உயிர் நீ இருக்கும் உலகுக்கே நானும் வரத் தயார்
வெறும் உலக வாழ்க்கை ----- நீயும் நானும்
ஆவிகளாய் அண்டசராசரமும் உலவி வருவோம் !

கடவுள்

கல் தோன்றியதும் பின்பு மண் தோன்றியதும்
கடல் தோன்றியதும் காலம் தோன்றியதும்
காற்றும் பூமியும் வானும் நிலவும்
நீரும் நெருப்பும் மனிதனும் மாக்களும்
நட்சத்திரம் முதலாய் விண்வெளி கோள்கள்
யாவும் தோன்றியது உன்னால் இறைவா !

வானும் நிலமும் ஒன்றை ஒன்று தொட்டு
பரவி கிடந்த உலகத்தை உன் சொற்களே
வெவ்வேறாய் பிரித்தது என்பர் பெரியோர்
எங்கும் பசுவெளி எங்கெங்கும் நீரோடை
வயல் வெளி தோறும் பசுமை தோற்றம்
மலை முகடுகளில் மேக மூட்டம் !

மூங்கில் கீற்றினிலும் புல் நுனியிலும்
முதல் நாள் இரவின் பனித்துளிகள்
காட்டருவி கிளிக்கூட்டம் குயில் கூவல்
புள்ளி மான்களின் துள்ளல் மயில் ஆட்டம்
புள்ளினங்கள் கூடு தேடும் அந்தி நேரம்
எத்தனை சுகங்கள் நங்கள் கண்டோம் கேட்டோம் !

உணவென்றால் விளைந்தது உண்டு வாழ்ந்தோம்
இரப்பவற்கும் கொடுத்தோம் இறைவன் உனக்கும் படைத்தோம்
நீர்நிலை தோறும் நிறைந்து இருந்ததனால்
நிலம் தோறும் பயிர் வைத்தோம் நெல்மணி
நெடுங் கரும்பு பயறு வகைகள்
நான்கு திசை சென்று நல்வழி கற்றோம் !

வந்தது புரட்சி வையத்து நாடுகளில்
மண்ணிலே மனிதனை மனிதன் மாய்த்துக்கொண்டான்
நிலம் முதல் நீர் வரை தனதென்றான்
பேசும் மொழியிலும் பழகும் மதத்திலும்
பேதங்கள் கொண்டு வந்தான் பொறாமை வளர்த்தான்
பொறுமை இழந்தான் பொய் புரட்டும் கற்றான் !

ஒருவன் கடவுள் எங்கே என்றான்
மற்றொருவன் கடவுள் காணும் இடம் எல்லாம் என்றான்
வார்த்தைகள் வளர்ந்து எங்கும் பிரிவு
பகை வளர்த்து நாடுகள் பகடைக் காய்களாயின
இப்போது பசுமை எங்கே பாசம் எங்கே
அண்ணன் எங்கே தம்பி எங்கே அன்பு மகன் எங்கே !

அன்னை பூமியிலே ஆண்டவனே என்ன விளையாட்டு
அனைத்தும் தெரிந்த நீ அமைதி காப்பதேன் !
அடுத்தவர் துன்பம் அழிப்பவன் நீயல்லவா ?
அன்பும் அரவணைப்பும் குறைந்து பண்பும்
பாசமும் மறைந்து பாதகங்கள் பெருகி
எங்கே போகிறோம் நங்கள் ? இறைவா வழி காட்டு !

கருவுற்ற காதல்

தேடிய நாட்கள் பல தேடுதல் தொடர்ந்தது
மனதிலே ஓடும் எண்ணங்கள் யாரே அறிவர்
சொல்லவொண்ணா துயர் என்றாலும் சொல்லுதல் ஆமோ
அம்மி மிதித்து அருந்ததி பார்த்ததால்
காலம முடியும் வரை என் காலம் முடியும் வரை
காப்பேன் என்றல்லவா சொல்ல வைத்தார்

அன்பு கொடியது அதனினும் கொடியது
அரவணைக்கும் காதல் என்பேன் பெண்ணே
விலை கொடுத்து வாங்க முடியும் என்றால்
அள்ளி கொடுத்தே அடுக்கடுக்காய் வாங்கி வைத்திடலாம்
அந்தோ ! வைரத்தை விடவும் அரிதான பொருளாயிற்று
அங்கே இங்கே எங்கெங்கும் தேடினேன் கிடைக்கவில்லை

உனக்குள்ளே ஊறிய ஊற்று எனக்கிங்கே புரிந்திருக்கவில்லை
உள்ளத்திலே நீதான் எப்படி வளர்த்திருந்தாய்
வெறும் நட்பாய் நான் நினைத்த நாட்களெல்லாம்
மெது மெதுவாய் உன்மனதில் உருவாகிய
காதல் என்று பிறகுதானே புரிய வந்தது
எத்தனை காலம்தான் ஏமாற்றிவிட்டாய் நீ

தேவதையாய் உணர்ந்தபோதும் அறிந்திருக்கவில்லை நான்
அரும்பும் காதல் மொட்டே அது என்று ..
நீருற்றி நீ வளர்த்த கதை நெடுநாட்கள்
மறைத்திருந்தாய் என்னிடம் நிறைமாத கர்ப்பிணியாய்
காதல் என்முன்னே வந்த போதே அறிந்தேன்
கரு தோன்றி காலம் பல ஆனதென்று

காதலை நீ பிரசவித்த போது
தந்தை நானென்று புளகாங்கிதம் அடைந்தேன்
கள்ளி நீ கனவிலே மட்டுமே
உருவாக்கிய குழந்தையை இத்தனை நாளாய்
மறைத்திருக்க எப்படி மனம் வந்தது
இப்போதாவது சொன்னாயே நன்றி உனக்கு !

தவம் செய்து கிடைத்தவளே

ஆண்டாண்டு காலமும் தவமிருந்து பிள்ளைகள்
பெற்றதாய் சொல்வார்கள் ..
ஆண்டுகள் பல காத்திருந்தேன் காதலி உனக்காக
குறிஞ்சி மலர் கூட பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும்
மெல்லியலாள் நீயோ நான்கு முறை குறிஞ்சி மலர்ந்தபோது வந்தாய்
வந்ததும் வந்தாய் வெள்ளி சிரிப்புடன் வந்தாய்

உனது மெல்லிய விரல்கள் நீவி வைரம் தோய்க்க வேண்டும்
வலியில்லாமல் ஒவ்வொன்றாய் சொடுக்கி நகக் கண்களில்
மருதாணி இட்டு சிவந்த அந்த அழகை
இன்று மட்டுமல்ல என்றென்றும் பார்த்திருக்க வேண்டும்
உன் புருவ கீற்றுகளில் கரு மை தீட்டி
கண் இமைகளில் மேலும் தடவி மீன் ஒத்த விழிகளால் என்றிட வேண்டும்

இலக்கண கட்டுப் பாட்டில் வார்த்தைகள் தேடி
கவிதை அமைப்பது கடினம் அதனால்
காட்டாற்று வெள்ளமாய் வரும் என்ன நீரோட்டத்துக்கு
தடை ஏதும் இல்லாமலே தனிப்பாடல் எழுத விழைந்தேன்
யாரோ சொன்னார் மூங்கினிலே காற்று நுழைந்து கீதம் தோன்றும் என்று
இங்கே உன்னில் நுழைந்த காற்று ஜீவ கீதமாய் என் காது மடல்களுக்கு

நீ சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்புக்கும் ஒரு கோடி பொற்காசு தரலாம்

உன் நாவில் தோன்றும் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு வாழ்வை தரலாம்
நீ உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் என் உயிரையே தரலாம்
உன் பார்வை மட்டும் எனக்கு கிடைக்குமென்றால் ஜென்மமெல்லாம் தரலாம்
நீ அருகினில் இருப்பதென்றால் என் ஆத்மாவே தரலாம்
உன் மூச்சு காற்றுக்கு எத்தனை பிறவி வேண்டுமாயினும் தரலாம்

கவிதையே நீ

நினைத்த போது நேரில் வருகின்ற வரம் வேண்டும்
நீ என்னிடத்திலும் நான் உன்னிடத்திலும்
நட்சத்திரங்களே பூக்களாய் நிலவே விடிவிளக்காய் வேண்டும்
நானும் நீயும் இரவுப்போதை பேசியே தீர்க்க

மனதிலே நீ நினைத்தால் என் எண்ணங்களில் தோன்றவேண்டும்
நான் உனக்கு பதிலை அப்போதே அனுப்பலாமே அதனால்
உனக்கு காய்ச்சலேன்றால் என் உடல் கொதிக்க வேண்டும்
அந்த நோய் போக்க மருந்தை உனக்காக நான் (உட் )கொள்வேன்

உன் விரல்கள் எல்லாம் எனது விரல்களாய் மாற வேண்டும்
உன் நெற்றி குங்குமத்தை அப்போது தானே நான் வைக்க முடியும்
உனது பார்வை எல்லாம் எனது பார்வையாக வேண்டும்
உனது விழிகளில் உலகை நான் காண நினைப்பதால்

நீ பாடும் பாடல்களின் வார்த்தைகள் நானாக வேண்டும்
அப்போது தானே உனது உணர்விலே நான் கலந்திருப்பேன்
உனது சிரிப்பிலே எழுகின்ற நாதம் நானாக வேண்டும்
அதனால் தோன்றும் கலகல வென்ற அலை சிரிப்பு உன்னிடம்

நெஞ்சிலே உன் பெயர் எழுதி முத்துக்கள் தூவி
வைரமும் முத்தும் மற்றும் உயர்கற்கள் யாவும் பதித்து
உன் கூந்தலின் முடிதனில் சிலவற்றை எடுத்து மாலையாக்கி
உன் சங்கு கழுத்தினில் சூடுவேன் காதலியே ..காத்திரு

என் நினைவே நீ தான்...

முதன் முதலாய் நாம் பார்த்த போது
முழுதாய் நாம் உள்ளங்களில் ஒன்றுமில்லை ..
களங்கமற்ற உன் முகமே என் கண் முன்னே நின்றது ..
குழந்தையாய் நீ எனக்கு தோன்றினாய் ..
மெல்லிய உடலால் மென்மையான பெண்ணானாய்..
வார்த்தைகள் முத்துக்களை உன் கொவ்வை வாய் திறந்து ..
உதிர்ந்தன ..உன்னத தோழி என்றே உன்னை
நான் நினைத்தேன் ..

மாதங்கள் பல உருண்டோடின ..மங்கை நீயோ அக்கரையில் ..
மற்றொரு முறை நான் உன்னை பார்க்காத போதும்
பாடல்கள் என்றும் படித்தவை என்றும்
பலவற்றை நாம் பரிமாறிகொண்டோம் - உள்ளத்தினுள்ளே
நீறு பூத்த நெருப்பாய் நீ என்னுள்ளும் நான் உன்னுள்ளும்
உறைந்திருந்ததை நாம் அறிந்திலோம் ..
ஊழிக்காற்று போல் வந்தது ஒரு நாள் ..உன் நினைவுகள் தாங்கி
உயிரோடு கலக்கவே காத்திருந்த ..உன் எண்ணங்கள் ..

ஆடிக்காற்றிலே எனது உனது ஆத்மாக்கள் அலைகழிக்கப்பட்ட பின்னே
அறிந்தோம் நாம் எனக்காக நீயும் உனக்காக நானும் உலகிலே பிறந்தோம் என்று .
உணர்ந்து கொள்ள எத்தனை ஆண்டுகள் நமக்கு
நான் பார்த்த பெண்களும் நீ பார்த்த ஆண்களும் நினைவில் நிற்காமல்
நிரந்தரமாய் ஒரு உறவை தேடி ஆவி போல் அலைந்தோமா ?
உருகும் மனதிற்குள் உயிர்கள் இணைந்ததுவோ ?
ஊண் உறக்கமில்லாத தினங்கள் பெருகிட ..
என் நினைவிலே நீ நிலைத்து விட்டாய் ..

உயிரோடு கலந்த உணர்வுகளே !

உயிரோடு கலந்த உணர்வுகளே
உணர்வுகள் உறைந்த எண்ணங்களே
எண்ணங்களில் நிறைந்த உன்னதமே
உன்னதமான ஒளிப் பூவே
பூவினும் மெல்லிய பெண்ணே
பெண்ணுக்கு அணிகலன் நீயே
நீயின்றி நானும் நானா ?
நானின்றி நீயும் நீயா ?

முடிவின் தொடக்கம் அந்தாதி என்பர்
முடிவே இல்லாத காவியம் வேண்டினேன்
முதல் முறை பார்த்த போது உன்னை
முகிழ்த்த மலராய் நீ தோன்றினாய்
பெண்மையின் மேன்மையை கண்டேன் உன்னில்
தந்தையின் பாதிப்பு உன்னிடம் அதனால்
பசுந்தமிழ் பாடல்கள் பிடித்தது
தெரிந்துருக்க வில்லை காதலி நீதான் என்று அன்று ..

கண்ணே கவிதைகள் எல்லாம் பொய்மை கலந்தது என்றாய்
உண்மையே உருவாய் உன்னை நான் காண்கிறேன்
உயிரே உருவாய் நீ உள்ள போது
உரைப்பேனா பொய்யை நான் உன் முன்னே
உணர்வும் உயிரும் நீயே வாழ்வும் நீயே
சுவர் வேண்டும் சித்திரம் எழுத – அதனால்
உணவுண்டு வாழ்வோம் உடல் காக்க
எனது உடல் உன்னிடத்திலும் உனது உடல் என்னிடத்திலும்
அதனால் ஊண் மறவோம் உறக்கம் மறவோம் உயிர் பாதுகாப்போம் கண்ணே ..

இயற்கை

வானத்து நட்சத்திரங்கள் விளக்குகளாய் மின்ன
வண்ணத் தோரணமாய் வான்வெளியில் வானவில்லும்
சூரிய கதிர்கள் புல் நுனி பனியில் ஊடுருவ
சுட்டாலும் சுகமே அவன் கதிர்கள்
இரவல் ஒளியில் இரவில் வரும் நிலவோ
இனிமை பொழுதில் இதமாய் ஒளிவீசும்

சொற்கள் தரும் சுகமே சொல்லும் நாவதனில்
சோகம் போக்கிவிடும் சுவையான வார்த்தைகள்
இளம் காலை போதினிலே இசைக்கும் புள்ளினங்கள்
இனிய நாளின் இனிதான ஆரம்பம்
இயற்கையே நீ தான் எத்தனை இன்பம்
இனி எங்கும் பரவசம் எங்கள் மனதில் !

செவ்வாய், 10 ஜூலை, 2007


Love is Eternal

Remember how we got into this Love cobweb
Reasons were many strongest is soulsearching
Me longing for love and affection
You looking for counselling and cajoling
Who in this world know when exactly it rains
Clouds of Love poured out on a sunny day
Destiny plays a lead role in this epic of emotions
Destination unknown many a times but
Both our souls wanted to travel along
Goal is clear "The Love lasts forever"

War of minds and passions always there
War of words and emotions exist
Winners are everyone no loosers
Grins on the faces no gloomy future
Aroma of thoughts fill our rooms
Alike our thinking at faroff places
Who proposed who disposed - none
Waves of love travels across the sea
Winds of changes take place in our hearts
Epic says this is eternal ; " Love is Eternal"