வியாழன், 22 ஜூன், 2017

மூப்பு

காலச் சக்கரத்தின் சுழற்சி
காலன் வரும் தருணம் வரை ஓய்வு
காட்டாற்று வெள்ளம்கூட வற்றும் நேரம்
காசினியில் கணக்கிட நாட்கள் மட்டுமே
கால்கள் தளர்ந்ததால் காத தூரம் நடை பெரும்பாடு
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை
கூனிிய முதுகில் கூர்தீட்டப் பார்க்கிறது
ஓடிய ஓட்டமும் ஓய்வெடுக்கப் போயிற்று
ஊன் சுருக்குண்டு உணவும் சுருங்கியது
மலையேற்றம் செய்த கால்கள் மாடிப்படியில் தவறியது
திமிர்கொண்ட வாலிப ஊற்று வற்றிய ஆறானது
திரும்பிப் பார்க்கிறேன் காலதேவனின் கள்ளப்புன்னகை

வியாழன், 13 ஏப்ரல், 2017

என்று தணியும் எங்கள் தாகம்

ஹே விளம்பி ஆண்டாம் பிறப்பது நாளை
நீ விளம்பு இன்று நமது நிலை என்ன
ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர் சரியில்லை
அதனால் அடுத்தடுத்து போராட்டம்
அரசியல் இன்று அடிமட்டத்தில் ஆர் கேட்பார்
அடுத்த வேளை கஞ்சிக்கே வழியில்லை
ஆனால் அவனால் தான் நீ இன்று
அரிசிச் சோறு நித்தமும் உண்கின்றாய்
வீதியில் இறங்கி போராடும் நிலை
விளக்கம் கேட்க மறுக்கும் தலைவர்
கணக்கிட்டே கடன் வாங்கி கட்டாத
கயவர்கள் நாடு விட்டு வேற்று நாட்டில்
வானம் பொய்த்து வயலும் காய்ந்து
வயிற்றுக்கு வகையாய் உணவு எங்கே
இவன் வாங்கிய கடன் சிறிதளவே
ஆனாலும் அச்சுறுத்தல் அதிகம்
குடி குடியை கெடுக்கும் விளம்பரத்தில்
குடியைத் தடுக்க கோரும் பெண்டிர்
குலக் கேடியின் கரத்தில் குத்துப்படுவர்
குடியரசா அன்றி கொடுங்கோல் அரசா
தலைவன் இல்லாத தவிக்கும் நாடாயிற்றா
தாங்காது இனிமேலும் தவிக்கிறது உள்ளம்
எழுச்சிப் போரில் எம் இளைஞன் இன்று
என்று தணியும் எங்கள் தாகம்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

தேசியம்

 எனக்காகவும் உனக்காகவும்
தமிழுக்காகவும்
தலை வணங்குகிறேன்
தொன்மை மொழியென்றாலும் ஆதிக்கம் செலுத்துவோர்பலர்
வீரமரபில் பிறந்தும்நாம்
தன்னடக்கம் மிகுந்த இனம்
வீர விளையாட்டு உலகில் பலவுண்டு
தினவெடுத்த எம் தோள்கள் சிலம்பம் சுற்றக் கண்டீரா ?

வெட்டுதல் குற்றமில்லை உண்ணுதல் குற்றமில்லை
உலக மக்களுக்கு உணவாய் ஆக்குதல் குற்றமில்லை
ஆயின் என் இனத்து வீர மறவர் ஏறுதழுவுதல் குற்றமென்றீர்
தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது இதுதானோ

மனிதனை மனிதனே மாய்ப்பதெல்லாம் போர்முனையில்
நாட்டைக் காக்க தவறில்லை அது
விலங்கினும் கேவலமாய் வீரர்கள் எல்லையில் தவறில்லை அது
தண்ணீர் தரமறுக்கும் அண்டை மாநிலம் சட்டம்மீறினால் தவறில்லை

அண்டைநாட்டினில் எம் இனத்தோர் நாயைப்போல் சுட்டுக்கொன்றாலும் குருடனாய் இருப்போம்
ஆனாலும் வீரவிளையாட்டு நடந்தேற விடவேமாட்டோம்
அந்நிய நாட்டு அடிமைகள்இன்னும்நாம்
சுதந்திரம் என்பதும் தேசியம் என்பதும் வெறும் பேச்சே


ஞாயிறு, 1 ஜனவரி, 2017

எதிர்காலம் என்பதே ஓர் எதிர்பார்ப்பு தானே

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது இன்று
எங்கும் கொண்டாட்டம் புத்துணர்ச்சி
எதிர்பார்ப்பு எவ்வளவோ எது நிறைவேறும்
எதிர்காலம் பதில் சொல்லும்

கடந்த காலம் மறந்து நிகழ்காலம் நுழைவோம்
கற்பனைக்கும் எட்டாத எவ்வளவோ நிகழ்வுகள்
ஒன்றொன்றாய் கண்முன்னே நடந்தேறின
ஒவ்வாத காட்சிகள்தான் செயலற்றோம்

நெஞ்சு பொறுக்குதிலை நேர்ந்த கதை நினைந்துவிட்டால்
உயர்ந்த மனிதர் பலர் இறவாப் புகழ் எய்தினர்
ஊழ் வந்து சேர்ந்தது போல் வார்தா புயல்
உள்ளூர் அரசியல் குழப்ப மாற்றம்

மக்கள் மட்டுமே மேலும் மேலும் துயருற்றர்
மாளிகை வாசிகள் ஊழல் அதிகாரிகள்
மக்கள் பணத்தை தனதாக்கிய தறுதலைகள்
மாற்றம் இல்லாமல் மகிழ்ந்திருந்தர்

இதுமட்டுமல்ல இதுபோன்று பலவும் கடந்த ஆண்டில்
புத்தாண்டில் இனிதானவை மட்டுமே வேண்டுவோம்
என்றும் போல் இன்றும் எதிர்பார்ப்போம்
எதிர்காலம் என்பதே ஓர் எதிர்பார்ப்பு தானே

புதன், 7 டிசம்பர், 2016

பிறப்பினும் இறப்பே மேலானதோ ?

எண்ணிப் பார்க்கிறேன் இதுவா அதுவா மேலானது
பிறந்த போது உச்சி முகர்ந்தவர் உறவினர் நண்பர்
பிறக்கும்போது வேறோர்  உயிருக்கு மறு பிறவி
வலியும் வேதனையும் முதலில் பிறகு மகிழ்ச்சி

உறவின் சங்கமத்தில் உதிரத்தின்  அணுக்களில்
உருவாகி உயிரின் உள்ளேயே வளர்ந்து
உடைந்த பனிக்குடத்தில் வெளிப்பட்டு
உலகின் காற்றை சுவாசிக்கும் உயிர் பிறக்கும்

உதிரத்தில் உருவாகும் தாயின் பாலே உணவாகும்
கருவில் உதைத்த கால்கள் காற்றினில் உதைக்கும்
பத்து மாதம் சுமந்தவள் சுக மூச்சு விடுவாள்
சுற்றமும் நட்பும் சூழ சுடர்விடும் வாழ்வில்

வளர்ந்த போதில் தெரிவதே இல்லை
வாழ்க்கையின் சூட்சுமம் வட்டமா சதுரமா
சூறாவளி போல் தென்றல் போல் சில நாட்கள்
சுற்றுப்  பாதையில் சூரியனாய் சில மனிதர் 

கடல் அலையாய் வாழ்க்கை சிலருக்கு
சுனாமியாய் வாழ்வு பலருக்கு
முடிவு மட்டும் தெரியாத பாதை
தொடரும் பயணம் விடியும் வரையில் இருள்

விட்டில் பூச்சியாய் இல்லாத மானிடர்
எரியும் திரியினால் சுட்டு விடாமல்
குடமதை விட்டு குன்றில் ஒளிவிடுவர்
குறையாத உறுதியும் குன்றாத தெளிவுடனும்

கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல்
வாழ்விலும் உண்டு பெருங் கணக்குகள்
மீதம் உள்ளது பூஜ்யமா புண்ணியமா
புத்தகம் முடிவினில் விதியின் கையில்

ஆன்மா பிரியும் வேளைதனில் அறிவோமோ நாம்
ஆய்வுகள் பலவும் பலவாறாய் பகிர்ந்தன
ஆனால் அமரராய் ஆன உயிருக்கு
அழிவிலா வாழ்த்துக்கள் உண்டு

துரோகம் வன்மம் பொறாமை விட்டொழித்து
சுற்றம் நட்பு சூழ்ந்து அனைவரும்
நன்மை எவையெவை என்பது மட்டுமே
 உரைக்கும் வேளை அதுவேயாகும்

உத்தமனாய் உலகில் உயர்ந்து போவதும்
உயிர் பிரிந்த அந்நாளில் உலகத்தோரால்
போற்றுதல் மட்டுமே தூற்றல் இல்லை
ஆதலின் கேட்பேன் பிறப்பினும் இறத்தல் மேலா   ?திங்கள், 15 ஆகஸ்ட், 2016

என்று சுதந்திரம் ?

முழுமைச்  சுதந்திரம் பெற்று விட்டோமா நாம்
மதங்களின் சாதியின் பெயரால் மாய்ப்பது நின்றதா ?
தனி மனிதர்க்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்
சொன்ன பாரதி இறந்து எத்தனை ஆண்டுகள் ஆயின

வறுமையின் வலியால் வாடும் வயிறுகளும் வேதனைகளும்
மற்றவர் வயிற்றுக்கு உணவளிக்கும் விவசாயிகள் இறப்பதும்
இத்தனை காலத்திற்குப் பிறகும் இருப்பது நிஜம் தானே ?
ஏற்றத் தாழ்வுகள் குறையாமல் இருப்பதும் உண்மைதானே ?

வெள்ளையன் சுரண்டிய காலம் போய் நம்மவர் சுரண்டல்
வெளிப்படையாய் புரையோடி உள்ளதா இல்லையா ?
கருத்துச் சுதந்திரம் காணாமல் போனதா இல்லையா ?
கழிவுக்காற்றை சுவாசிக்கும் அவலம் உள்ளது தானே

உத்தமர் ஆண்ட நாட்டினை உன்மத்தர் ஆளும் போக்கும்
ஊழல் பெரு முதலைகள் உலகம் சுற்றும் நிகழ்வும்
இந்திய நாட்டினில் இன்னமும் இருப்பதும் உண்மை தானே ?
இதற்கெல்லாம் விடிவு யார் காணுவர் எப்போது காண்பார் ?

எங்குமே அமைதியில்லை நாட்டுக்கு நாடு எல்லைக்கு எல்லை
ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு எதிலும் கலவரம் ஏதோ ஒரு காரணம்
இப்போது சொல்லுங்கள் சுதந்திரம் அடைந்துவிட்டோமா நாம் ?
கொடியவை நீங்கி  நன்மைகள்ஓங்கும் அந்நாளே சுதந்திர நாளாம் !வெள்ளி, 29 ஜூலை, 2016

கலாம்

அற்புத மனிதர் அன்பு மயமானவர்
அனைவரின் மனதில் அமர்ந்திருப்பவர்
இந்திய தேசத்தை உலகம் நோக்க செய்தவர்
இரவு பகல் பாராமல் உழைத்த உத்தமர்
இன்று ராமேஸ்வரத்தில் உறங்குகின்றார்

கனவுகள் காணுங்கள் சிறகடித்து பறக்கட்டும்  எண்ணங்கள்
சீரிய சிந்தனைகளோடு  சிறுவர் முதல் முதியோர் வரை
சிற்பிகளாய் இந்த நாட்டினை உயர்த்த ஊக்கம் தந்தவர்
உலக ஜன நாயகத்தின் உயர்ந்த பதவி பெற்றும்
உத்தமனாய் தனக்கென வாழா மனிதருள் மாணிக்கம்

காந்தியை போன்றும் காமராஜர் போன்றும்
கடைசி மூச்சு வரை நாட்டிற்காய் சுவாசித்தவர்
நானிலம் தோறும் நடவுங்கள் மரங்களை என்றுரைத்து
முற்றுப்பெறாத கனவினை நம்மிடம் விட்டு
அவரை எடுத்துக்கொண்டான்  காலன் கொடியவன்

பூமிக்குள் அணு சக்தி உயர் வானத்தில்  செயற்கை கோள்
உலகினில் இன்னொரு வல்லரசாய் உயர வைத்து
அனைத்துலக  நாடுகள் ஆஹா என்று வியக்க
அமைதியாய் புரட்சி ஒன்றை நிகழ்த்தி விட்டு
இன்று ஆழ்ந்த உறக்கத்தில்  அமரராய் !